லொஹன் ரத்வத்தே, கையில் இரத்தக்கறை படிந்தவன் - மகிந்த அணிமீது குமார கடும் தாக்குதல்
கண்டியில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தன்னை விமர்சித்த போது அந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மத்துகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள குமார வெல்கம,
நான் எவருடைய அடிமையும் இல்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடாவிட்டால், ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியில் உள்ள சிரேஷ்ட தலைவர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி பதவி என்பது குடும்பம் ஒன்றுக்கு உரித்ததான ஒன்றல்ல. ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியில் சிரேஷ்ட தலைவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது மிகவும் பொருத்தமானது என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல, மகிந்தானந்த அளுத்கமகே, லொஹன் ரத்வத்தே, திலும் அமுனுகம ஆகியோர் தன்னை விமர்சித்துள்ளமை தொடர்பிலும் வெல்கம கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க அழைத்த நேரத்தில் மகிந்தானந்த அளுத்கமகே ஏன் தலையை குனிந்து தரையை பார்த்துக் கொண்டிருந்தார் என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.
மகிந்தானந்தவுக்கு முதுகெலும்பு இருந்திருக்குமாயின் அன்று நான் கூறியபோது தான் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வர மாட்டேன் என முகத்திற்கு நேராக கூறியிருக்க முடியும். மகிந்தானந்தவுக்கு முதுகெலும்பு இருந்திருந்தால், ஏன் நுகேகொடை கூட்டத்திற்கு வரவில்லை?.
கண்டியில் நடந்த கூட்டத்தின் பக்கம் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை. அந்த கூட்டத்தின் மேடையில் திலும் அமுனுகம மாத்திரமே ஏறினார்.
அத்துடன் டை கோர்ட் அணிந்து கொண்டு பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், என் மீது குற்றம் சுமத்துகிறார்.
எனினும் 100 நாள் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது அமைச்சர் பதவியை வழங்குமாறு கோரி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் மண்டியிட்டார். மேலும் லொஹன் ரத்வத்தே என்பவர் கையில் இரத்தக்கறை படிந்த நபர் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment