"பாரிய பொருளாதார நெருக்கடியில் நாடு"
(இன்றைய (03) நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
நாடு பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை எதிர்நோக்கப்போவதாக பொருளாதார நிபுணர்கள் முன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குவதற்கு வழிமுறைகளை வகுக்குமாறு பொருளாதாரத்துடன் தொடர்பான நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு விதித்துள்ள பொருளாதாரத் தடை மற்றும் சீனாவுடன் இடம்பெற்றுவரும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு கூடுதலான வரி விதித்துள்ளமை என்பன காரணமாக இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கவுள்ளது.
அமெரிக்கா ஈரானுக்கு விதித்துள்ள பொருளாதாரத் தடை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படும். இலங்கையின் தேயிலையைக் கூடுதலாக வாங்கும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள சுங்கத்தீர்வை காரணமாக எதிர்காலத்தில் சீன அரசு கடனோ, பாரிய மட்ட உதவிகளையோ செய்யாது என பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
நாடு ஏற்கனவே ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சிகண்டு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. அடுத்த சில மாதங்களில் இந்த நிலைமை மேலும் மோசமாகலாம்.
பிரதமர் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் மூலோபாயங்களை வகுக்குமாறு விடுத்துள்ள பணிப்புரைப்படி உபாய விதிகள் மற்றும் சர்வதேச வர்த்தகம் அமைச்சு மற்றும் கைத்தொழில் வணிகம் அமைச்சு என்பன ஒரு வார காலத்தில் திட்டம் ஒன்றை வகுக்கவுள்ளது.
அரசாங்கம் இந்த நெருக்கடியை தனியாக எதிர்கொள்ளாது எதிர்க்கட்சிகளதும் கருத்துக்களை பெறுவது முக்கியமானது. எதிர்க்கட்சிகளும் அரசியல் லாபத்தை மட்டும் நோக்கிச் செயற்படாது இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஆலோசனைகளை வழங்க முன்வரவேண்டும்.
வெளிநாட்டு இறக்குமதி தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசு தாமதித்தேனும் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்புக்குரியது. அதே நேரம் அரசு வீண் செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு பட்டியை பலப்படுத்துமாறு கேட்கும் அரசு இதன் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு இன்றும் முன்மாதிரி காட்டவில்லை.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையிலும் தலைவர்கள் அமைச்சர்கள் தம் வெளிநாட்டு விஜயங்களுக்கு பெருமளவு பணத்தைச் செலவு செய்வது பற்றி பரவலான விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. அரசாங்கத் தலைவர்களது முன்மாதிரி இச்சந்தர்ப்பத்தில் மிகவும் அவசியமானது.
Post a Comment