சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்ட நிலையில் வந்த பேரலைகள் - இதுவரை 832 பேர் வபாத்
சக்திவாய்ந்த பூகம்பத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் மத்திய சுலாவெசி தீவைத் தாக்கிய சுனாமி காரணமாக சுமார் 832 பேர் பலியாகியுள்ளனர்.
சுனாமி தாக்கத்திற்கு இலக்கான பலு நகரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 832 என அறிக்கையிட்டுள்ள தேசிய இடர்முகவரகம் சனிக்கிழமையும் மீட்புப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிட்டிருந்தது.
7.5 ரிச்டர் அளவில் இடம்பெற்ற பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையினால் சுமார் 350,000 மக்கள் வாழும் பலு நகரத்தின் கரையோரத்தில் பகுதியளவில் மூடப்பட்ட நிலையில் உடல்கள் காணப்பட்டன.
இதற்கு அருகில் இருக்கும் சுமார் 330,000 மக்கள் வாழும் டொங்காலா நகரத்தின் நிலைமை இதைவிட மிக மோசமாக இருக்கும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டதாக இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஊடகவியலாளரான டொமி சொயிட்ஜிப்டோ தெரிவித்தார்.
அங்கிருந்து உயிரிழப்புக்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாமை அங்கு காணப்படும் ஆபத்து நிலையின உணர்த்துவதாக் அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமையன்று மாலை ஆரம்பமாகவிருந்த கடல் களியாட்டக் கொண்டாட்டமொன்றுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கவலைகள் அதிகரித்துள்ளதாக தேசிய இடர் முகவரகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே நகரிலுள்ள வைத்தியசாலைகள் காயமடைந்தோரின் வருகையால் நிரம்பி வழிவதோடு ஏராளமானோருக்கு திறந்த வெளியில் சிகிச்சையளிக்கப்படுவதோடு தப்பிப் பிழைத்தவர்கள் உயிரிழந்தோரின் சடலங்களை மீட்பதற்கு உதவி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை சுனாமி அச்சம் தோன்றியபோதிலும் உடனடியாக அங்கிருந்து வெளியேறாது பலர் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் என இந்தோனேசியாவின் இடர்முகவரகத்தின் பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ தெரிவித்தார்.
சிலர் ஆறு மீற்றர் உயரமான மரங்களில் ஏறி சுனாமியிலிருந்து தப்பித்துக் கொண்டதாகத் தெரிவித்த அவர் மணிக்கு 800 கிலோமீற்றர் வேகத்தில் வந்த சுனாமி வீடுகளையும் உட்கட்டமைப்புக்களையும் தகர்த்ததாகத் தெரிவித்தார்.
பாதிப்புக்கள் பரவலாக இடம்பெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள், வைத்தியசாலைகள், கடைத் தொகுதிகள் மற்றும் ஹோட்டல்கள் இடிந்து வீழந்துள்ளதோடு, பாலமொன்றும் அள்ளுண்டு சென்றுள்ளது, பலுவிற்கான பிரதான அதிவேக நெடுஞ்சாலை மண்சரிவினால் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
பூகம்பத்தின் பின்னரான சிறு அதிர்வுகள் சனிக்கிழமையும் தொடர்ந்து ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பூகம்பம் இடம்பெற்ற இடத்திலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பலுவில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடமொன்றிலிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள காணொலியொன்றில் கடல் அலையினால் பல கட்டங்கள் வீழ்த்தப்படுவதும் பெரிய பள்ளவாசலொன்று சேதமடைவதும் காண்பிக்கப்படுகின்றது.
கரையோரத்திலிருந்த வீடுகள் கடல் அலையில் அள்ளுண்டு செல்வதைக் கண்டதும் நான் ஓட ஆரம்பித்துவிட்டேன் என பலு பிரதேசவாசியான ருசிடான்டோ தெரிவித்தார்.
பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக பலுவில் பாரிய மின் தடை ஏற்பட்டுள்ளதன் காரணமாக பிரதேசம் முழுவதும் தொலைத் தொடர்புகள் முற்றாக சீர்குலைந்துள்ளதோடு கடந்த சனிக்கிழமை யன்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர்.
கிழக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பலுவுக்குச் செல்வதற்கான வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பூகம்பத்தினால் விமான ஓடுபாதை மற்றும் கட்டுப்பாட்டுக் கோபுரம் என்பன சேதமடைந்ததன் காரணமாக நகரத்தின் விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், உதவிகளை உள்ளே கொண்டுவரச் செய்வதற்காக அதனை மீளத் திறப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடுக்கமான குடாவொன்றினைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இந் நகரம் சுனாமி அலைகள் புகுந்ததன் காரணமான மிகப் பெரிய குடாவாக மாறியுள்ளது.
பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரை தேடிக் கண்டுபிடித்து மீட்பதற்காக இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தேனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ தெரிவித்தார்.
தேசிய அனர்த்த முகவரகம் உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களையும் ஒன்றிணைக்குமாறு அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சருக்கு ஏலவே பணிப்புரை விடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார். தேடல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட அவசர நிலைகளைக் கையாள்வதற்கும், அடிப்படை தேவைகள் அவசியப்படுமிடத்து அவற்றை தயாரித்தல் உள்ளடங்கலான பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றுதல் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுமாறு இராணுவத் தளபதிக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளில் இணைந்துகொள்வதற்காக சரக்கு விமானத்தில் வைத்தியர்களையும்; உதவிப் பொருள்களையும் அனுப்பி வைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கள வைத்தியசாலையொன்றை விரைவில் நிறுவக்கூடியதாக இருக்குமென எதிர்பார்ப்பதாக அண்டட்டா பிராந்திய வைத்தியசாலைப் பணிப்பாளர் கெமங் அதி சுஜேந்திரா தெரிவித்தார்.
எமக்கு மருந்துப் பொருட்கள், மருத்துவ பணியாளர்கள், தார்ப்பாய்கள், மெத்தை விரிப்புக்கள் மற்றும் மேலும் பல பொருட்களும் தேவைபபடுகின்றன. பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு மக்கள் உதவுவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, வீதிக் கட்டமைப்புக்கள் மிக மோசமாக சேதமடைந்திருப்பதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜகார்த்தா மற்றும் பிற நகரங்களிலிருந்து உதவிகள் வந்தடைய தாமதமடையலாமென இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஊடகவியலாளரான டொமி சொயிட்ஜிப்டோ தெரிவித்தார்.
அண்மித்த நகரங்களில் தற்காலிக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது பொரும்பாலான மக்கள் தமது வீடுகளுக்கு வெளியே தங்கியிருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தேனேசியாவின் வானிலை மற்றும் பூகற்பவியல் முகவரகம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும் 34 நிமிடங்களின் பின்னர் அது நீக்கப்பட்டது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நேரத்திலேயே அலைகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்த போதிலும், பலுவைத் தாக்கிய சுனாமி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அம் முகவரகம் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை டொங்காலாவில் சக்தி குறைந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் சில வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்தார், குறைந்தது 10 காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1927 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் பலு பிரதேசம் சுனாமி அனர்த்தத்திற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
M.I.Abdul Nazar
Its not Sunami, SECRET SOCIETY testing nuclear under the deep sea & THEY ARE TRY TO CONTROL MUSLIM'S POPULATION IN THE WORLD BY THIS ACTION!
ReplyDelete