Header Ads



தரம் 5 பரீட்சை, கொடுமை நிறைந்தது - மருத்துவ நிபுணரின் எச்சரிக்கை

'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை போடுவது சிறுவர் இம்சையாகும்' என்கிறார் பாடசாலைகள் சுகாதாரம் தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளரான சமூக மருத்துவ நிபுணர் அயேஷா லொக்குபாலசூரிய.

புலமைப்பரிசில் பரீட்சையின் பேறுபேறுகளின் சூடு இன்னும் தணியவில்லை. வெற்றி பெற்றவர்களின் செய்திகள் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றன. வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவது, பதாகைகளை வைப்பது என கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. இவ்வாறான நிலைமைக்குக் காரணம் என்ன? சித்தி பெற்ற மற்றும் சித்தி பெறாத மாணவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? இவை குறித்து விசேட வைத்திய நிபுணர் அயேஷா லொக்குபாலசூரிய தெளிவுபடுத்துகின்றார்.

கேள்வி: ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சை போட்டியின் தீவிரம் உக்கிரமடைந்து வருகின்றது. புலமைப் பரிசில் பரீட்சையை ஆரம்பித்ததன் நோக்கம் தற்போதைய நிலையில் நிறைவேற்றப்படுகின்றதா?

பதில்: இலங்கையில் ஆரம்பப் பாடசாலைகள் பெருமளவில் காணப்படுகின்றன. அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் திறமையான மாணவர்களுக்கு அதை விட சிறந்த பாடசாலையைத் தெரிவு செய்வதற்காகவே புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது. அதே கிராமப்புறங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் திறமையான, பொருளாதார வசதிகளற்ற மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெற்றுக் கொடுப்பதும் இப்பரீட்சையின் நோக்கமாகும். நாம் அன்று இந்தப் பரீட்சைக்கு ஏழாம் வகுப்பில்தான் முகங்கொடுத்தோம். அன்று நாம் பரீட்சைக்கு செல்கின்றோம் என்று மட்டும்தான் அறிந்திருந்தோம். இவ்வாறான பரீட்சையென நாம் அறிந்திருக்கவில்லை. அன்று அன்னையர்கள் இந்த பரீட்சையைப் பற்றி எதுவும் எண்ணவில்லை. அன்று பரீட்சை பெறுபேறுகள் கூட இரண்டு வருடங்கள் கழிந்துதான் வந்தன. பெறுபேறுகள் வந்த பின்னர் பத்தாம் ஆண்டில் வேறுபாடங்களுக்குச் செல்லலாம். அதுதான் அன்றைய புலமைப்பரிசில் பரீட்சை முறையாகும். இன்று போல் போட்டியிருக்கவில்லை. அன்றைய நோக்கத்தை இன்றைய பரீட்சையில் காண முடியாதுள்ளது.

கேள்வி: புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளையும், குடும்பத்தையும் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை ஒரு வைத்தியராகக் கூற முடியுமா?

பதில்: அன்று சாதாரண தரம், உயர்தரத்தில்தான் போட்டி காணப்பட்டது. இன்று அந்தப் போட்டி சிறு பிள்ளைகளின் பரீட்சைக்கு வந்துள்ளது. போட்டிக்கு பிள்ளைகளைத் தெரிவு செய்வது அன்னையாவார். அன்னையர் காலை ஆறு மணியிலிருந்து இரவு வரை பிள்ளைகளுடன் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுகின்றார். வீட்டிலுள்ள குழந்தைகள் பற்றி அக்கறை கொள்வதில்லை. சாப்பாடு பற்றி ஆராய்வதில்லை. மனைவியின் கடமை என்னவென்று உணர்வதில்லை. இந்நிலைமை குடும்பத்தினுள்ளே மோதலை உருவாக்குகின்றது. ஏனைய குழந்தைகளுடனான ஒற்றுமையும் பாதிப்படையலாம். முன்னர் தரத்தில் உயர்ந்த பெரிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் பரீட்சை எழுதுவதில்லை. அவர்களின் குடும்பப் பின்னணி, பொருளாதார நிலைமை என்பன சிறப்பாக இருந்தன. தேவையான வசதிகள் அனைத்தும் இருந்தன. புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கு அமைய அனைத்துப் பாடசாலைகளின் தரமும் கல்வித் துறையில் நிர்ணயிக்கப்படுகின்றது. அதனால் இப்பரீட்சை பாடசாலைகளுக்கிடையேயும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மாணவர்களை பிழிந்தாவது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்ய பாடசாலை நிர்வாகம் முயற்சிக்கின்றது.

கேள்வி: புலமைப்பரிசில் பரீட்சையில் ஓடும் ஆசியர்களும் இருக்கிறார்கள் என்று கூறுகின்றீர்களா?

பதில்: இன்று கிராமிய பாடசாலைகளை புலமைப்பரிசில் பரீட்சையில் பெறும் வெற்றியைக் கொண்டே மதிப்பிடுகின்றார்கள். அந்தப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பரீட்சையில் வெற்றி பெறுபவர்களை வைத்தே கெளரவிக்கப்படுகின்றார்கள். அதனால் ஆசிரியர்கள் இயல்பாகவே போட்டியில் ஓடுகின்றார்கள். அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு அந்தப் பாடசாலையில் மதிப்பில்லை. பாடசாலையை பிரபல்யப்படுத்த அப்பாவி மாணவர்களை துன்பத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். பாடசாலை மதிலில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பதாதைகளை வைக்கின்றார்கள். அதனை தோல்வியடைந்த மாணவர்கள் கவலையுடன் பார்த்தபடி செல்கின்றார்கள். இதுதான் இலங்கையில் சிறுவர் துன்புறுத்தலாகும். வீட்டில் சுதந்திரமாக இருக்க விடுவதில்லை. பாடசாலையில் சுதந்திரமாக கல்வி கற்க அனுமதிப்பதில்லை. மாணவர்களின் மனம் வளர்ச்சியடைந்துள்ள அளவை விட அதிகமாக மனதுக்குள் திணிக்கின்றார்கள். குறைந்தபட்சம் பாடசாலைகளை மதிப்பீடு செய்யும் பழக்கத்தையாவது நிறுத்த வேண்டும். அதுவும் நடைபெறுவதில்லை. அது மாத்திரமல்ல சித்தியடைந்தவர்களை ஜனாதிபதியை சந்திக்கவும் அழைத்துச் செல்கின்றார்கள். புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்களின் புத்திமட்டத்தில் சிறிதளவே பரீட்சிக்கப்படுகின்து. பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களை விட திறமையானவர்கள் இருக்கலாம். அவர்களில் ஒருவரையாவது ஜனாதிபதியிடம் அழைத்துச் செல்வதில்லை. ஆகவே சிறுவர்களைப் பயன்படுத்திச் செய்யும் இந்த நடவடிக்கைகள் நியாயமற்றவையாகும்.

கேள்வி: குறைந்த அபிவிருத்தி அடைந்த பாடசாலையிலிருந்து பிரபல பாடசாலைக்கு செல்வதற்கான சந்தர்ப்பம் புலமைப்பரிசில் பரீட்சை மூலம் கிடைக்கிறது அல்லவா?

பதில்: பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை வசதியான பாடசாலைகளுக்கு செல்லும் தடைதாண்டும் பரீட்சையாக இதனைக் கொள்வது தவறில்லை. காரணம் அவர்களுக்கு தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேறு மாற்றுவழியில்லை. ஆனால் இதனை நாம் பிள்ளைகளுக்கு செய்யும் அநியாயம் என்றும் குடும்ப அமைப்பை பாதிக்கச் செய்யும் பரீட்சை என்றும் கருதுகின்றோம். நாம் பாடசாலை சுகாதாரப் பரிவு என்ற ரீதியில் தேவையான ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். குறைந்த அபிவிருத்தியடைந்த பாடசாலைகளிலுள்ள பிள்ளைகளை போட்டியின்றி பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்குத் தேவையான பின்னணியை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. கிராமிய பாடசாலைகளுக்குக் கிடைக்கும் வளங்களில் பிரச்சினையுண்டு. அப்பாடசாலைகளுக்கு போதுமான அளவு ஆசிரியர்களை வழங்கி, பாடசாலையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் நகர்ப்புற பாடசாலைக்கு வருவதை குறைக்க முடியும். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும். நகரப் பாடசாலைக்கு ஒரே பாடத்தை கற்பிக்க இரண்டு மூன்று ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள். ஆனால் கிராமிய பாடசாலைகளில் ஒரு ஆசிரியர்கூட இல்லை. இந்நிலைமை மாறுமானால் புலமைப் பரிசில் போட்டியிலிருந்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் விலகிச் செல்வார்கள்.

கேள்வி: பரீட்சை காரணமாக பிள்ளைகளிடம் ஏற்படும் மனமாற்றங்கள் என்ன?

பதில்: இந்தப் பாதிப்பிலிருந்து மீள்வது சிரமம். சில பிள்ளைகள் விரைவாக பழைய நிலைமைக்கு வந்து விடுவார்கள். சிலரின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால் அவர்களை மனஅழுத்தத்திலிருந்து மீட்டு பரீட்சைக்குத் தயார் செய்வது மிக முக்கியமாகும். அனைவருக்கும் விடயங்களை புரிந்து கொள்ளும் திறமை முழுவதும் இல்லை என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிள்ளையினதும் புரிந்து கொள்ளும் திறமை மாறுபட்டது. அதனால் வீட்டின் உள்ளேயே பாதிப்புக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் உண்டு. நிறைய குழந்தைகள் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற வருகின்றார்கள். அநேகமான பிள்ளைகள் தாயுடன் சண்டை பிடித்துக் கொண்டு மனக்குழப்பத்துக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருவதாக சிறுவர் வைத்தியசாலை டொக்டர்கள் தெரிவிக்கின்றார்கள். அந்நிலைமைக்கு குழந்தைகளை ஆளாக்காமல் இந்தப் போட்டியிலிருந்து விளக்கி வைக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த நாட்டில் பல்லைக்கழகங்களுக்கு தெரிவானோரில் அநேகம் பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்களே ஆவர்.

கேள்வி: மூன்றரை இலட்சம் பேரளவில் பரீட்சைக்குத் தோற்றினார்கள். அதில் பதினையாயிரம் பேரளவிலேயே சித்தியடைந்தார்கள். அதிலும் அநேகமானோர் பிரபல பாடசாலை மாணவர்கள் இந்நிலைமையில் கிராமப் பாடசாலை மாணவர்களின் நிலைமை என்னவாகும்?

பதில்: என்னுடைய கருத்து என்னவென்றால் பிரபல பாடசாலை மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தோற்றினால் கிராமப்புற மாணவர்களுக்கான சந்தர்ப்பம் குறைவடையும். புத்தகங்களின் அறிவு மாத்திரம் போதுமென்று யாரேனும் எண்ணினால் அது முட்டாள்தனமான கருத்தாகும். இந்த வயதில் சமூகத்திலிருந்து அவர்கள் பலவற்றை கற்றுக் கொள்கின்றார்கள். அது அனுபவங்கள் மூலம் எதிர்கால வாழ்வுக்கு பாடங்களைக் கற்றுக் கொள்கின்றார்கள். இன்று பிள்ளைகள் சமூக அறிவில் பூரணமானவர்கள் அல்ல. புத்தக அறிவு மாத்திரமே உள்ளது. அதனால் தொழிலுக்குச் செல்லும் போது பலவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். இந்த நிலைமை இன்று நாட்டின் பிரச்சினையாகும். குறைந்தபட்சம் புலமைப்பரிசில் பரீட்சையை ஏழாம் தரத்திற்கு கொண்டு சென்றால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும். முன்னர் இருந்த முறை தற்பொதைய நிலைமைக்கும் பொருந்தும் என எண்ணுகின்றேன்.

கேள்வி: இந்த பரீட்சையை இரத்து செய்யுமாறு ஆசிரயர் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. அவ்வாறு செய்வதால் கிராமப்புற பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகும் அல்லவா?

பதில்: இங்கு பிரச்சினைக்கு மாற்றுவழி இல்லாததே காரணம். பரீட்சையை இரத்துச் செய்து பிள்ளைகளை மேலே கொண்டு வர வேறு முறையொன்றை எண்ணவே இல்லை. அதனால்தான் பரீட்சை ஏழாம் தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று கூறுகின்றோம். அடுத்த விடயம் பாடசாலை தேவையில்லாத பிள்ளைகள் பரீட்சைக்குத் தோற்றாமல் விடுவதாகும். இந்நாட்டில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அந்தப் பொறுப்பு கல்விக் கொள்கைகளை உருவாக்கும் அதிகாரிகளிடமே உள்ளது.

துமிந்த அளுத்கெதர, தமிழில்: வீ. ஆர். வயலட்

No comments

Powered by Blogger.