இஸ்ரேலுக்கு 500 இலங்கையர்களை அனுப்ப திட்டம்
விவசாயத் துறையில் இலங்கையர்களுக்கு ஐந்து வருட விசா வழங்க இஸ்ரேல் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் சென்றுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பில் அந்நாட்டு
அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
பிரதியமைச்சர் தலைமையிலான இலங்கைக் குழுவினர், இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் மற்றும் பிபா நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியது. இந்தக் கலந்துரையாடலிலேயே இலங்கையர்களுக்கு விசா வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
சர்வதேச குடியகல்வு முகவர் அமைப்பின் நடுநிலைமையுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவும் இஸ்ரேலுக்கு விவசாயத்துறையில் பணியாற்ற இலங்கையர்களை அனுப்ப முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு தற்காலிக விசாவுடன் விவசாயத்துறையில் பணியாற்றச் சென்ற 500 பேர் கொண்ட குழுவில் பலர் விசா அனுமதிக்காலம் முடிவடைந்த பின்னரும் நாடு திரும்பாமல் தங்கியுள்ளனர். அவ்வாறானவர்களைத் தவிர விவசாயத்துறைக்கான கோட்டாவில் எஞ்சிய தொகையினர் விசா வழங்கி அனுப்பிவைப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், தாதியர் துறையில் 500 பேருக்கு விசா வழங்குவது தொடர்பில் இரு நாட்டுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. தனியார் வேலைவாய்ப்பு முகவர்களின் ஊடாக நேர்முகப் பரீட்சைகள் நடத்தி விசா வழங்குவதில் இழுபறிகள் காணப்படுவது குறித்தும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
இச் சந்திப்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் பெரியசாமிப்பிள்ளை செல்வராஜா, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய, இலங்கைத் தூதரகத்தின் ஆலோசகர் விஜயரட்ண ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post a Comment