முஸ்லிம் தனியார் தொடர்பில், நவம்பர் 30 இற்குள் இறுதி தீர்மானம் - தலதா அதிரடி
முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டத்தில் திருத்தங்கள் முஸ்லிம் சமூகத்தின் சிவில் அமைப்புக்கள், புத்தி ஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்பே மேற்கொள்ளப்படும். திருத்தங்கள் தொடர்பான இறுதித்தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தன்னைச் சந்தித்த பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளிடமும், முஸ்லிம் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரின் ஏற்பாட்டின் கீழ் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் மற்றும் முஸ்லிம் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலோசனை மற்றும் நல்லிணக்க பேரவையின் பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்கள். இச்சந்திப்பில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரும் கலந்து கொண்டி-ருந்தனர்.
தாருல்ஹுதா, அல்முஸ்லிமாத், கெயார் லைன் (Care Line) ஆகிய பெண்கள் அமைப்புகள் ஆலோசனை மற்றும் நல்லிணக்கப் பேரவை மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என 20 பேர் இச்சந்திப்பில் பங்கு கொண்டிருந்தனர்.
இக்குழுவினர் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் சிபாரிசுகளையே அனுமதிப்பதாகவும் ஷரீஆவுக்கு முரணான எந்தச் சிபாரிசுகளையும் அனுமதிக்கக் கூடாது எனவும் நீதி அமைச்சரை வேண்டிக் கொண்டனர்.
முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16 ஆக அமைய வேண்டும் எனவும் 16 வயதுக்கு குறைவான முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கு காதி நீதிபதிகளின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் காதிநீதிவான் அனுமதி வழங்குவதற்கான வழிமுறை (Guide Lines) ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர்.
காதிநீதிமன்றங்களின் தரத்தினை உயர்த்துவதன் மூலமும் கட்டமைப்பினை மாற்றியமைப்பதன் மூலமும் தற்போது நிலவும் பிரச்சினைகளில் 50 வீதமானவற்றைத் தீர்க்கலாம் எனவும் வலியுறுத்தினர். காதிநீதிபதிகளுக்கு 60 ஆயிரம் ரூபா சம்பளமாக வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு நீதிமன்ற கட்டட வசதிகள், காரியாலய வசதிகள், போக்குவரத்து வசதிகள் என்பன வழங்கப்பட வேண்டும்.
காதிநீதிபதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படாமை பாரிய குறைபாடாக இருக்கின்றது. இதனை நீதியமைச்சு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு தொடர்பில் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் கருத்து தெரிவிக்கையில், நீதியமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சில விடயங்களில் மாத்திரமே முரண்பாடுகள் காணப்படுகின்றன. இருதரப்பும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் இணக்கப்பாட்டினை எட்டமுடியும் எமக்குள் நாம் பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டிருப்பதில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்றார்.
முஸ்லிம் பிரதிநிதிகளின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்ட நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள முஸ்லிம் சமூகத்தின் கருத்துகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் தாமதியாமல் ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கும் படியும் வேண்டிக்கொண்டார். முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டினை அறிந்து கொண்டதன் பின்பு மீண்டும் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
-Vidivelli
The MMDA should be amended or totally replaced. It's not divine.
ReplyDelete