Header Ads



15 வயது கர்ப்பிணி சிறுமியை, கொன்றவனுக்கு மரண தண்டனை - நாளை பிறந்த தினம்

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

15 வயதுக்குக் குறைந்த சிறுமியொருவரை, கர்ப்பிணியாக்கிக் கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த திருகோணமலை இளைஞனை, குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை ​மேல் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து, இன்று (23) தீர்ப்பளித்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டாவது நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், ​போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாமையால், அவரை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனினால், இன்று (23) வழங்கப்பட்டது.

15 வயதுக்கும் குறைந்த சிறுமியை, 2010ஆம் ஆண்டு, 6ஆம் மாதம் 27ஆம் திகதியன்று அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபகஹவுல்பொத்த காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள் என, இருவருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

ஹேரத் முதியன்சேலாகே டில்ஹானி குமாரி  குணதிலக்க என்ற 15 வயதுக்கு குறைந்த சிறுமியைத் திருமணம் முடிப்பதாகக் கூறியே, மேற்படி வழக்கின் குற்றவாளி, அப்பிள்ளையுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.

பிள்ளை கர்ப்பமுற்றதை அறிந்த அவர், மேலே குறிப்பிட்ட காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த குளத்துக்குள் மூழ்கடிக்கச் செய்துள்ளார். அப்பிள்ளை இறந்ததன் பின்னர், சடலத்தை எடுத்துப் புதைத்துள்ளார். அதன்பின்னர், அதனைத் தோண்டியெடுத்து, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

வழக்கின் முதலாவது சந்தேக நபரான மொறவெவ, இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த  நயிது ஹென்னதிகே நிஷாந்த ஜெயலத் (வயது 28) என்பவரே இக்கொலையைச் செய்துள்ளார். இரண்டாவது சந்தேக நபரான அவரது உறவினரான பின்னதுவகே இஸுரு சமிந்த  சில்வா என்பவரும் அவருடன் சென்றுள்ளார் எனக் குற்றப்பத்திரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

வழக்கின் தீர்ப்பு, இன்று (23) வாசிக்கப்படுவதற்கு முன்னர், குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த இருவரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டனர்.

முதலாவது சந்தேநபரே திட்டமிட்டு இக்கொலையைப் புரிந்துள்ளார் என இனங்கண்ட நீதிமன்றம், வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர், சம்பவம் நடக்கும் காலத்தில், வயதில் சிறியவனாக இருந்தமையால், ​குற்றவாளியுடன் தெரியாத் தன்மையில் சென்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே, இது, திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள மனிதப் படுகொலை என இனங்கண்ட நீதிமன்றம், முதலாவது சந்தேகநபரைக் குற்றவாளியாக இனங்கண்டு, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இரண்டாவது சந்தேகநபரை, வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

இன்று (23) மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு, நாளை 24ஆம் திகதி 28 வயது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. Salute to our Great Judge. Proper Punishment to Culprit...

    ReplyDelete

Powered by Blogger.