போலி பேஸ்புக் - காத்தான்குடியில் 11 பேர்கைது
மட்டக்களப்பில் போலி முகநூல் கணக்கு விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நேற்றிரவு மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடியில் பல்வேறு தரப்பினரையும் இழிவுபடுத்தும் வகையில் போலி முகநூல் பக்கமொன்றில் தவறான செய்திகள் பதிவேற்றப்பட்டு வந்துள்ளன.
இந்த நிலையில், நேற்று இரவு குறித்த போலி முகநூல் குழுவினர் தங்களது போலி முகநூல் வழியாக மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தவாறு நேரலை ஒன்றை வழங்கியுள்ளனர்.
இவ்வேளையில் அவர்கள் பயணம் செய்த மோட்டார்சைக்கிளின் முன்பக்க கண்ணாடியில் நேரலை வழங்கிய முகநூல் குழு உறுப்பினரின் முகமும், அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த கடற்கரைப் பகுதியும் தென்பட்டுள்ளது.
இதனை அறிந்து கொண்ட மாற்றுக்குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்குரிய போலி முகநூல் குழுவிரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டபோது அது தாக்குதலாக மாறியுள்ளது.
இதன்போது தனது மகனும் தாக்கப்படுவதாக அறிந்து அதை தடுக்க சென்ற ஒரு பெண்ணும் தாக்குதலின் விளைவாக காயமடைந்துள்ளார்.
சம்பவத்தை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட 9 பேர், போலி முகநூல் குழுவை சேர்ந்தவர்கள் என கருதப்படும் சந்தேகத்துக்குரிய இரு இளைஞர்கள் என மொத்தம் 11 பேரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான சந்தேகநபர் ஒருவரின் தாயார் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment