பாகிஸ்தான் மீது இந்தியா தாக்கினால், பதிலுக்கு 10 தாக்குதல்கள் நடத்தப்படும் - பாகிஸ்தான்
இந்தியா எங்கள் நாட்டின் மீது ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ந்தேதி வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு பலத்த பதிலடி கொடுப்பார்கள் என பாகிஸ்தானை மறைமுகம் ஆக குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா இங்கிலாந்து நாட்டுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் சென்றுள்ள அந்நாட்டு ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரியான ஆசிப் காபூர் லண்டன் நகரில் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று கூறினார்.
எங்களுக்கு எதிராக செயல்படலாம் என நினைக்கும் எவருக்கும், எங்களின் வலிமை மீது சந்தேகம் வர வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தினை வலுப்படுத்த ராணுவம் விரும்பியது. பாகிஸ்தானின் வரலாற்றில் பொது தேர்தல் மிக வெளிப்படையாக நடந்தது என அவர் கூறினார்.
தொடர்ந்து, ஊடகங்களுக்கு கட்டுப்பாடு என்ற தகவல்களை மறுத்துள்ள காபூர், நாட்டில் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது என கூறினார். அதன்பின்னர், பாகிஸ்தானில் மோசம் நிறைந்த விசயங்களை விட பல நல்ல முன்னேற்றங்கள் உள்ளன. இந்த விசயங்களையும் சர்வதேச ஊடகங்கள் சுட்டி காட்ட வேண்டும் என கூறினார்.
Post a Comment