"சமூகத்தையும் நாட்டையும் காட்டிக் கொடுக்கின்ற எந்த சக்தியைiயும நாங்கள் அனுமதிக்கமாட்டோம்"
ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களைச் செய்து இந்த அரசை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அதேபோன்று சர்வதேச சக்திகளின் தேவைக்கு ஏற்ப இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நாட்டை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மஞ்சத்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக இலங்கையின் முதலாவது யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல திட்டங்களை முன்னெடுக்கின்றது. அதனைக் குழப்பி நாட்டில் இனவாதத்தைத் தூண்டி அரசை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.
ஜனாதிபதியின் அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய முன்பு இந்த அரசை ஒருபோதும் யாராலும் மாற்ற முடியாது.
ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களைச் செய்து இந்த அரசை வீழ்த்த முடியாது. சிலர் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
30 வருட யுத்தத்தில் இந்த மண்ணில் நாங்கள் மிகவும் துவண்டு போய் தற்போது தான் சற்று மீண்டெழுவதற்கு ஆரம்பித்துள்ளோம்.
வெறும் யுத்தம் மாத்திரமே நிறைவடைந்துள்ளது. இன்னும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கூட காணப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை அது நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என நாங்கள் பல முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.
எனினும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படக்கூடாது, நாட்டில் அமைதி நிலவக்கூடாது என்பதில் சில சர்வதேச சக்திகள் கவனமாக இருக்கின்றன.
நாட்டில் இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதன் ஊடாக இந்த மண்ணில் தமது கரங்களை பதிக்க சில வல்லரசுகள் முயற்சிக்கின்றன.
இது தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
அரசியலுக்காக, அற்பசொற்ப வசதிகளுக்காக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தங்களது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மிகக் கீழ்த்தரமாக சமூகத்தையும் நாட்டையும் காட்டிக் கொடுக்கின்ற எந்தவொரு சக்திக்கும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" - என்றார்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த போது அப்போதைய மத்திய அரசின் சுகாதார அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒத்துழைப்புடன் மஞ்சத்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையை 2009ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலையாகப் பதிவு செய்தார்.
தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இன்று இலங்கையின் முதலாவது யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக இது தரமுயர்த்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
Post a Comment