ஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன், கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் - CID தகவல்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் டிபெண்டர் வண்டியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சி.ஐ.டி.க்கு கிடைத்துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்னாயக்க, வசீம் தாஜுதீன் விவகாரத்தை விசாரணை செய்யும் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை குறித்த விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்குஹெட்டி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க, சார்ஜன் ரத்னப் பிரிய ஆகியோருடன் மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் தாக்கல் செய்து இந்த விடயத்தை நீதிவானுக்கு அறிவித்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பளித்த கடற்படை வீரர்கள் தொடர்பிலான விபரங்களை வழங்க கடற்படை தளபதி மறுப்பாராயின், அவருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 173 மற்றும் 174 ஆவது அத்தியாயங்களின் கீழ் செயற்பட்டு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது நீதிவான் இசுரு நெத்தி குமார சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும், சி.ஐ.டி.க்கும் ஆலோசனை வழங்கினார்.
மேலும் இந்த கடற்படை வீரர்கள் தொடர்பில் தகவல்கள் மறைக்கப்படுவது தொடர்பில் அத்தகவல்களுக்கு பொறுப்பான உயர் கடற்படை அதிகாரி ஒருவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் அவரிடம் எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்னாயக்க நீதிவானுக்கு அறிவித்தார்.
இன்றைய தினம் வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் கைதாகி பிணையில் உள்ள நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா , முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க , முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது வஸீம் தாஜுதீன் படுகொலை விவகார விசாரணைகள் மிக நீண்டகாலமாக பல்வேறு காரணங்களுக்காக இழுத்தடிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிவான்,
குறித்த விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்யுமாறும், விசாரணைகள் தாமதமடைவதற்கான காரணம் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள மூன்று சந்தேக நபர்களுக்கும் எதிரான சாட்சிகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் என்பவற்றை உள்ளடக்கி விரிவான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டதுடன் வழக்கை எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment