ஒலுவில் கடலரிப்பை தடுப்பதற்கு, உடன் நடவடிக்கை எடுக்கவும் - பைசல் காசீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஒலுவில் கடலரிப்பை உடனடியாகத் தடுக்கும்வகையில் ஆழ்கடலில் இருந்து மண்ணை அகழ்ந்து கரையோரத்தை மீள்நிரப்பும் செயற்திட்டத்தை உடன் மேற்கொள்ளுமாறு சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டபோது அது அப்பகுதி மக்களுக்கு விடிவைக் கொண்டு வரும் என்று எல்லோரும் மகிழ்ச்சியடைந்ததிருந்தனர். ஆனால்,அது அழிவையே கொண்டு வரும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.
இதன் நிர்மாணப் பணிக்காக மக்கள் காணிகளை இழந்தது ஒருபுறமிருக்க அவர்களை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கும்வகையில் இப்போது நாலாயிரம் மீனவர்களின் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.கரைவலை மூலம் மீன் பிடித்து வாழ்வை நடத்தி வந்த இம்மக்களின் வாழ்வு இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தத் துறைமுக நிர்மாணத்தின்போது கடலினுள் பாரிய கருங்கற்களால் தடை அமைக்கப்பட்டது.இந்தத் தடை ஏற்படுத்தப்பட்ட நாள் முதல் ஒலுவில்,நிந்தவூர்,பாலமுனை,சாய்ந்தமருது,காரைதீவு,மாளிகைக்காடு போன்ற ஊர்களில் கரைவலை மீன்பிடி கிட்டத்தட்ட இல்லாமலேயே போயுள்ளது.
இயற்கையாக இடம்பெற்று வந்த கரை நீரோட்டம் பாதிக்கப்பட்டதனால் கரையோரத்தின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் கடல்நீர் துறைமுக வாயிலை அடைப்பதுடன் துறைமுக்கத்தின் தென்பக்கம் மணலைக் கொண்டுவந்து சேர்க்கின்றது.துறைமுக வாயில் அடைபடுவதனால் துறைமுகத்தினுள் மீன்பிடி படகுகள் நுழைய முடியாமல் உள்ளன.
இதனால் துறைமுகத்தின் வடக்கு திசை பாரிய கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது.இதனால் வெளிச்ச வீடு மற்றும் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் போன்றவை பாதிக்கப்பட்டதால் இவற்றைப் பாதுகாப்பதற்காக அதிகாரசபை கடலினுள் வடக்கு தெற்காக அலைத்தடுப்பு வேலி ஒன்றினை அமைத்தது.
இந்த வேலி அமைக்கப்பட்டதன் பின் வடக்கில் இருக்கும் கிராமங்களானஅட்டப்பள்ளம்,நிந்தவூர்,காரைதீவு,மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது போன்ற ஊர்கள் பாரிய கடலரிப்புப் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டன.இதனால் இவ்வூர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.
15 ஆயிரம் கரைவலை குடும்பங்கள் பாதிப்பு,கடல் தாவரங்கள் அழிவு,கரையோரத்தில் இருந்த வயற்காணிகள் மற்றும் தென்னந்தோப்பு உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட ஏக்கர் காணி கடலுக்குள் உள்ளீர்ப்பு,கடல் ஆமைகளின் இணைப்பெருக்கம் பாதிப்பு,கடற்பாறைகள் வெளித்தள்ளப்பட்டு மீனவர்களின் வேலைகளுக்கு பாதிப்பு போன்ற பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் நான் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை அழைத்துச் சென்று காண்பித்துள்ளேன்.இருப்பினும்,நிரந்தரத் தீர்வுகள் எவையும் முன்வைப்படவில்லை.இதனால் கடலரிப்பின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
பாறாங்கற்களைப் போட்டு இதைத் தடுக்க முடியாது.அவை கரைவலை மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.ஆகவே,வென்னப்புவ போன்ற இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிபெற்ற ஆழ்கடலில் இருந்து மண்ணை அகழ்ந்து கரையோரத்தை மீள்நிரப்பும் செயற்பாட்டின் மூலமாகே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணமுடியும்.
ஆகவே,இந்தத் திட்டத்தை உடன் நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் ஊர்களையும் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் உங்களிடம் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.
-எனத் தெரிவித்துள்ளார்.
[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]
Post a Comment