Header Ads



அற்புதமான பிரார்த்தனையின் பெறுமதி (உண்மைச் சம்பவம்)


ஹஸன் ஸுஹைப் முராத் அன்று சின்னஞ் சிறுவன். 10 வயதும் இருக்காது.

அவரது தந்தை குர்ரம் முராத் ஹஜ்ஜுக்குச் செல்கிறார்.

அழுது அழுது கரம் ஏந்துகிறார். அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறார்.

ஹஜ் கிரியைகளை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுகிறார்.

கறைகள் போக்கி நிறைந்த ஈமானோடும் தெளிந்த உள்ளத்தோடும் வீடு திரும்புகிறார்.

“அருமைத் தந்தையே! எனது நல்வாழ்வுக்காக பிரார்த்தித்தீர்களா?” என்று ஆவலுடன் கேட்கிறார் சிறுவன் ஹஸன் ஸுஹைப்.

“எனது சின்ன மகனே! உனக்காக உயர்ந்த பிரார்த்தனை ஒன்றை செய்திருக்கிறேன். உனது மரணம் வீர மரணமாக (ஷஹாதத்) வேண்டுமென்பதே எனது அந்தப் பிரார்த்தனை” என்றார் தந்தை குர்ரம் முராத்.

சிறுவன் ஸுஹைபுக்கோ ஆச்சரியம். “தந்தையே! நல்வாழ்வுக்காக பிரார்த்திக்காமல் எனது மரணத்துக்காக அல்லவா நீங்கள் பிரார்த்தித்திருக்கிறீர்கள்!” என்றார் கலக்கத்தோடு.

“இல்லை… இல்லை… அதுதான் உனது நிரந்தர, உயர்ந்த வாழ்க்கைக்கான பிரார்த்தனை” என்றார் தந்தை பேரறிஞர் குர்ரம் முராத்.

கடந்த திங்கட்கிழமை கலாநிதி ஹஸன் ஸுஹைப் முராத் விபத்தொன்றில் மரணமடைந்ததையடுத்து அவர் குறித்து வந்த செய்திகளில் இதுவும் ஒன்று.

“ஷஹீதுகள் ஐந்து பேர்: 

தொற்று நோயினால் மரணித்தவர், 
வயிற்றுப் போக்கால் மரணித்தவர்,
நீரில் மூழ்கி மரணித்தவர், 
இடிபாடுகளுக்குள் உட்பட்டு மரணித்தவர், 
அல்லாஹ்வின் பாதையில் (யுத்த களத்தில்) மரணித்தவர்.” 

(ஸஹீஹுல் புகாரி)

வீதி விபத்துக்களும் இடிபாடுகளுக்கு உட்பட்டு மரணித்தல் போன்ற எதிர்பாராத பயங்கர அழிவுகள்தான்.

யா அல்லாஹ் அவரது திடீர் மரணத்தை ஷஹாதத்தாக ஏற்று அங்கீகரிப்பாயாக!

-Jemsith Azeez-

No comments

Powered by Blogger.