ஜனாதிபதி கொலை சூழ்ச்சி..? கைதான இந்தியர் இவர்தான்
ஜனாதிபதி உட்பட்ட பலரை கொலை செய்ய திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை இலங்கையில் அடைக்கலம் கோரியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தரப்புக்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி உட்பட்ட பலரை கொலை செய்ய திட்டமிட்டார் என்று குற்றச்சாட்டில் கைதான மார்சிலி தோமஸ் என்ற இந்தியர் கேரளாவை சேர்ந்தவராவார்.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் ஊடாக குறித்த இந்தியர் இலங்கையில் அடைக்கலம் கோரி கடந்த வருடம் ஏப்ரல் 3ம் திகதி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த நாமல்குமார என்ற காவல்துறையின் முன்னாள் உளவாளியுடன், தொடர்பை கொண்டிருந்தார் என்ற அடிப்படையிலேயே இந்த இந்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இந்தியர் சுற்றுலா வீசா முடிவடைந்தநிலையில் இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளார்.
இந்தநிலையில் தோமஸ் என்ற தமது நாட்டு பொதுமகன் தொடர்பில் இந்திய அதிகாரிகளும் விசாரணையில் உதவிவருகின்றனர். இதன்படி அவருடைய தொடர்புகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.
கைதுசெய்யப்பட்ட இந்தியரிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் செய்தி அடங்கிய ஆங்கில செய்தித்தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment