அகதியொருவர் தலைமை தாங்கும் கட்சி, "நெருப்பாற்றைக் கடக்கவும், நெருஞ்சி முள்ளில் நடக்கவும் பழக்கப்பட்டுவிட்டது"
-ஊடகப்பிரிவு-
பாதிக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்த கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விளங்குவதனாலேயே பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற மக்களை தேடிச் சென்று, அக்கட்சி உதவி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேசத்திற்கான மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு, நேற்று மாலை (07) மதுரங்குளியில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,
நாளாந்தம் பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகள், இடர்களுக்கு மத்தியிலேதான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பயணஞ்செய்து வருகின்றது. நெருப்பாற்றைக் கடந்தும், நெருஞ்சி முள்ளில் நடந்தும் நாங்கள் பணியாற்றி வருகின்றோம். இறைவன் எங்களது செயற்பாடுகளை அங்கீகரித்ததன் விளைவினாலேயே எமது கட்சி வளர்ச்சிப் போக்கை காட்டி, எழுச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது.
புத்தளம் தேர்தல் தொகுதியைப் பொறுத்தவரையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் வெற்றிடம் மூன்று தசாப்தகாலத்தையும் தாண்டிவிட்டது. தொடர்ந்தேர்ச்சியாக இங்கு வாழும் மக்கள் பிரதிநிதித்துவத்தை இழந்து வருவதனால், புத்தளம் வாழ் மக்களின் உரிமைகள், பாதிப்புக்கள் குறித்து பாராளுமன்றத்தில் பறைசாற்றி, தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது,
புத்தளத்தில் அரசியல் நடாத்தி வரும் தேசியக் கட்சிகளும், முஸ்லிம் கட்சியும் இந்த மண்ணின் மைந்தர் ஒருவரை பாராளுமன்றத்தில் பிரதிநிதியாக்கி அலங்கரிக்க வேண்டுமென்ற வேலைத்திட்டத்தை இதுவரை வகுக்கவும் இல்லை. அதில் நாட்டங்காட்டவும் இல்லை.
எனினும், குறுகியகால வரலாற்றைக் கொண்ட மக்கள் காங்கிரஸ், அதற்குரிய திட்டங்களை வகுத்து செயற்படுத்தும் போது, அக் கட்சியை வேற்றுக்கண்ணாடி போட்டு சிலர் பார்க்கின்றனர். அகதியொருவர் தலைமை தாங்கும் கட்சியெனவும், இடம்பெயர்ந்த மக்களின் ஆதரவுத் தளத்தைக்கொண்ட கட்சியெனவும் எம்மை வகைப்படுத்தி, பிரிவினைகளை விதைத்து புத்தளம் வாழ் மக்களிடம் நச்சு விதைகளைத் தூவுகின்றனர். தேர்தல் காலங்களில் வாக்குகளை சூறையாடுவதற்காக இந்தக் கோஷத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து, எம்மையும் தூற்றி, இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி, விமர்சித்து வாக்குகளைக் கச்சிதமாகப் பெற்றுக்கொள்கின்றனர்.
மக்கள் காங்கிரஸ் தலைமை, புத்தளம் மண்ணினது இழந்த அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதில் தூய்மையாகவும், நேர்மையாகவும், உறுதியாகவும் செயற்படுகின்றது. இந்த மக்களின் வாக்குகளைப் பெற்று கட்சியின் அந்தஸ்தை அதிகரிக்க வேண்டுமென்றோ, தலைமையை பலப்படுத்த வேண்டுமென்றோ எள்ளளவும் நாம் எண்ணவில்லை.
அகதியாக வந்த எமக்கு அடைக்கலம் தந்த பூமியை வளப்படுத்த வேண்டுமென்ற வேணவா எங்களிடம் நிரம்பியிருக்கின்றது. நாம் வாழ்ந்து வரும் இந்த மண்ணுக்கு, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற உன்னதமான எண்ணமும் எமக்கு இருக்கின்றது. வாக்குப் பலத்தின் மகத்தான சக்தியை நீங்கள் உணர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்று சிந்தித்து, அதற்கு எந்தக் கட்சி சரியான பாதையை அமைத்து வருகின்றதென்று மனச்சாட்சியுடன் எண்ணினால், புத்தளத்துக்கான பிரதிநிதித்துவம் மிக இலகுவாக கிட்டிவிடும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரையில், இந்த மண்ணின் அரசியல் விடுதலைக்காக மிகவும் திட்டமிட்டு கருமமாற்றி வருகின்றது. கட்சிக் கிளைகளையும், மத்திய குழுக்களையும் அமைத்து மக்களின் அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் மட்டுமே தீர்த்து வைத்து, ஏதோ காலத்தை ஓட்டிவிடலாம் என்று நாங்கள் துளியளவும் நினைக்கவில்லை.
கல்பிட்டியில் இன்று அமைக்கப்பட்டுள்ள மத்திய குழுவைப் போன்று, இந்தப் பிரதேசத்தில் இன்னும் சில குழுக்களை அமைத்து, அதிலிருந்து மாவட்டத்துக்கான ஒரு தாய்க் குழுவொன்றை அமைத்து அதன் மூலம், புத்தளத்தின் இழந்த மக்கள் பிரதிநிதித்துவங்களை மீண்டும்பெற வழிவகுப்போம். மக்களின் வாக்குகளை பயனுள்ளதாக, வலுவுள்ளதாக மாற்றியமைப்போம்.
புத்தளத்து மக்களுக்கு தமது பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அத்தனை தகுதியும், தகைமையும் இருந்த போதும் பிளவுகளும், பிரிவுகளுமே அவற்றைத் தூரமாக்கி வைத்துள்ளது என்ற உண்மையை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட்டால், எட்டாக்கனியாகிப் போய்விட்ட இழந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நீங்கள் ஏமாந்தது போதும், இனியாவது விழித்தெழுங்கள். புத்தளத்துக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காகும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி உரையாற்றியதுடன், சிறந்த போராளிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
30 வருட யுத்த காலத்தில், வட-கிழக்கில் வாழ்ந்த 99% அனைத்து மக்களும், ஏதாவது ஒரு காலப்பகுதிலாவது அகதியாக இருந்திருப்பார்கள் அல்லது இடம் பேயர்ந்து இருப்பார்கள் தானே.
ReplyDeleteஅப்படியில்லா விட்டால் தானே அது அதிசயம், ஆச்சரியம்.