உடற் தகுதியில்லையா..? மறுக்கிறார் மெத்தியூஸ்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸ் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அஞ்சேலா மெத்தியூஸை தற்போது இங்கிலாந்துடனான தொடரில் நீக்கியுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சிம்பாவே இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இலங்கை அணி படுதோல்வியை சந்திக்க அஞ்சலோ மெத்தியூஸ் முதன்முறையாக பதவியிலிருந்து நீங்கினார்.
அதன்பிறகு மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்ற மெத்தியூஸ், நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் அடைந்த படுதோல்வியின் பின்னர் தேர்வுக்குழு அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்கியது.
எனினும் தலைமைப் பதவி பறிபோனால் பரவாயில்லை அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலிருந்த அவருக்கு தேர்வுக்குழு மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளது.
அதாவது தேர்வுக்குழுத் தலைவரான கிரஹம் லெப்ரோய், மெத்தியூஸின் உடற் தகுதியில்லாத காரணத்தினால் இங்கிலாந்துடனான தொடரிலிருந்து அவரை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது குறித்து தெரிவித்த மெத்தியூஸ், உடற்தகுதி சோதனை நடத்தாமலே நான் உடற்தகுதியை இழந்து விட்டேன் என்று எவ்வாறு கூற முடியும். அவ்வாறு நான் உடற்தகுதியை இழந்து விட்டேன் என்று நீங்கள் கருதினால் நான் அதனை நிரூபித்துக் காட்டவும் தயார் என கிரஹம் லெப்ரோய்க்கு பதிலளித்துள்ளார்.
இதுவரை 106 போட்டிகளுக்கு தலைமைப் பதவி ஏற்று வழிநடத்தியுள்ள மெத்தியூஸ், 49 போட்டிகளில் வெற்றியையும் 51 போட்டிகளில் தோல்வியையும் தழுவிக் கொண்டுள்ளார். அத்துடன் இதில் ஒரு போட்டி வெற்றி, தேல்வியின்றி முடிவடைந்ததுடன், 5 போட்டிகள் மழையால் இரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment