"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்" - அமான் அஷ்ரப்
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது.
கேள்வி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் மகனாக அனைவரும் உங்களை அறிந்துவைத்துள்ளனர். அதனைத் தாண்டிய தனிப்பட்ட அறிமுகமொன்றைத் தரமுடியுமா?
பதில்: 1998ஆம் ஆண்டு ஊடகத்துறைக்கு உதவித் தயாரிப்பாளராக யா டீவியில் அறிமுகமாகி, சிரேஷ்ட தொலைக்காட்சி தயாரிப்பாளராக பயிற்சி பெற்றேன். ஊடகத்துறையுடன் தொடர்புபடும் அனைத்து வகையான பயிற்சிகளையும் ஐக்கிய இராச்சியத்தில் பெற்றேன். இலங்கைக்கு திரும்பி, 2002ஆம் ஆண்டிலிருந்து விளம்பர துறையில் இணைந்து, 20 வருடங்களாக ஊடகத்துறையில் தொடர்புபட்டுள்ளேன். சுயமாக விளம்பர நிறுவனமொன்றை ஆரம்பிக்கும் நோக்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது. வாப்பாவுக்கு கொழும்பு டேம் வீதியில் அஷ்ரப் எசோஷியேட்ஸ் என்ற பெயரில் தனியார் சட்ட நிறுவனமொன்று இருந்தது. வாப்பாவின் பெயருக்கும் ஒரு நினைவாக அஷ்ரப் எசோஷியேட்ஸ் என்ற பெயரில் 2012ஆம் ஆண்டு சுயமாக விளம்பர நிறுவனமொன்றை ஆரம்பித்து, நடத்திச் செல்கின்றேன்.
கேள்வி: உங்கள் ஆரம்பக் கல்வி தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லையே...
பதில்: நாம் 1983ஆம் ஆண்டு பிரச்சினைகளுடன் கொழும்புக்கு இடம்பெயர்ந்தோம். கொழும்பில் தங்குவதற்குகூட இடமில்லாத நிலையில் அகதிகளாக இருந்தோம். எங்களுக்கென்று ஒரு முகவரி இருக்கவில்லை. என்னை கொழும்பு பாடசாலையொன்றுக்கு இணைத்துவிட வாப்பா பெரிதும் சிரமப்பட்டார். அது உயர் கல்வியமைச்சராக காலஞ்சென்ற லலித் அதுலத்முதலி செயற்பட்ட காலம். அவர் சட்டக் கல்லூரியில் வாப்பாவுக்கு விரிவுரையாளராக செயற்பட்டவர். அவரது கடிதத்துடன் வாப்பா கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சென்று, என்னை அனுமதிக்க முயற்சித்தார். ஒன்றுமே பயனளிக்கவில்லை. 1986ஆம் ஆண்டு கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பாடசாலையான விச்சலி இன்டர்நெஷனலில் வாப்பா என்னை இணைத்துவிட்டார். நான் கல்வியில் பிரகாசிக்கவில்லை. சாதாரண தரத்துடன் கல்வியை இடைநிறுத்தினேன். புத்தாக்க துறையில் தான் அதிக கவனம் குவிந்திருந்தது. எப்போதுமே எனது ஆங்கில மொழி சிறப்பானதாக இருந்தது. ஆங்கில மொழியறிவு காரணமாக முதலாவது தொழிலாக யா டீவியில் இணைந்துகொள்ள முடிந்தது.
கேள்வி: மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மேடையில் வீற்றிருந்த நிகழ்வொன்றில் நீங்கள் ஏதோவொரு ஊடகப் பணியில் ஈடுபட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த நிகழ்வை மீட்ட முடியுமா?
பதில்: நான் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. வாப்பாவுக்கு எனது எதிர்காலம் குறித்து எப்போதும் கவலையாக இருந்தது. நான் தொழிலொன்று தேடிக்கொள்வேன் என்றேன். அதற்கு வாப்பா, பரீட்சை பெறுபேறுகள் இல்லாமல் எவ்வாறு தொழில் பெறுவது? என்று கேட்டார். அதனை நான் பார்த்துக்கொள்கின்றேன். மகனுக்கு தொழிலொன்றை பெற்றுக்கொடுக்குமாறு நீங்கள் யாரிடமும் பரிந்துரை செய்யவேண்டாம் என்றேன். ஏதாவதொரு தொழில் வேண்டுமென்று முயற்சித்தபோது யா டீவியில் தொழில் கிடைத்தது. முதலாவது 6 மாதங்களில் எனது முதல் வேலைத் தொகுப்பை செய்துமுடித்து வாப்பாவுக்கு காட்டினேன். அவர் அதிகம் மகிழ்ச்சியடைந்தார். எனது முதல் மாத சம்பளத்தால் வாப்பாவுக்கு சட்டையொன்றும் காட்சட்டையொன்றும் உம்மாவுக்கு ஆடையொன்றையும் வாங்கிக் கொடுத்தேன். அப்போது வாப்பா என்னை கட்டியணைத்து அழ ஆரம்பித்துவிட்டார். அன்றிரவு, அமான் குறித்து இனிமேல் கவலைகொள்ளத் தேவையில்லை என்று உம்மாவிடம் கூறியிருந்தார்.
1999ஆம் ஆண்டில் ஏ.சீ.எஸ்.ஹமீத் நினைவு நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது. அதனை ஒளிப்பதிவு செய்ய அலுவலகத்திலிருந்து நான் சென்றேன். வாப்பா மேடையிலிருந்து என்னைக் கண்டு சிரித்தார். இவர் ஏன் கெமரா வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றார் என அங்கிருந்த ஏனையோருக்கு ஆச்சரியமளித்தது. பின்னர் பலரும், என்ன சேர்! தம்பி கெமராவுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார். தம்பியை ஒரு சட்டத்தரணியாக்கலாமே! என்று ஆலோசனை கூறினர். அவர்களுக்கு, வாப்பா கூறியதெல்லாம், ’உங்கள் பிரச்சினைகளைப் பற்றி கதைக்கவும். அமான் மகிழ்ச்சியாக இருக்கின்றார்’ என்பதாகும்.
கேள்வி: தந்தையுடனான உங்களது தனிப்பட்ட உறவு எவ்வாறிருந்தது?
பதில்: சிறு வயதில் இருந்தே அவர் சிறந்த நண்பனாக என்னைப் பார்த்தார். தனிப்பட்ட அல்லது எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அவருடன் கலந்துரையாட முடியுமாக இருந்தது. பாராளுமன்றத்தில் இருந்தாலும் எனது அழைப்புக்கு பதிலளிக்க தவறவில்லை. 2000ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடாமல் நுஆ கட்சியில் போட்டியிட தீர்மானித்திருந்தார். அது கட்சியின் பலரைப் போன்றே என்னையும் அதிருப்திகொள்ளச் செய்திருந்தது. நான் துறைமுக அமைச்சுக்குச் சென்றேன். ஏன் இவ்வாறான தீர்மானத்துக்கு வந்தீர்கள் என்று கேள்வியெழுப்பினேன். அதற்கு எனது ஆதரவு கிடைக்காது என்றேன். அதனை அவதானித்த வாப்பா சிரித்துக்கொண்டே, மகனுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார். அதனைத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு நுஆ கட்சியினூடாக அவரது திட்டங்கள், தூர நோக்கு என்பவற்றை தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து வாப்பாவின் தீர்மானம் சரியே என்று ஏற்றுக்கொண்டேன். அந்தளவு நெருக்கமாக இருந்தார். கட்சியின் முக்கியமான தீர்மானங்களை உயர் சபைக்கு அறிவிக்க முன்னர் என்னிடமும் உம்மாவுடனும் கலந்துரையாடுவார். எமது வித்தியாசமான கருத்துக்களை உள்வாங்கிக்கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதுவே வாப்பாவுடனான தனிப்பட்ட உறவாகும்.
கேள்வி: மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் குடும்ப உறவுகளை எவ்வாறு பேணிநடந்தார்?
பதில்: குடும்பம் என்றால் அவருக்கு உயிர். அது நானும் உம்மாவும் மாத்திரமல்ல. வாப்பாவின் கூடப்பிறந்த மூன்று சகோதரிகளுடனும் சிறந்த முறையில் நடந்துகொண்டார். ஏனைய உறவினர்களுடனும் அவ்வாறு தான். அமைச்சராகிய பின்னர் ஒருமுறை வாப்பாவுக்கு காக்கா முறையான, சகோதரன் முறையான ஒருவர் ஏதோவொரு விடயத்தில் தூற்றிக்கொண்டிருந்தார். அதற்கெதிராக வாப்பா வாய் திறக்கவில்லை. பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார். அதுகுறித்து நான் கேட்டபோது, ’அவர் எனது காக்கா தானே. அவரு தூற்றாமல் யாரு தூற்றப்போகின்றார்’ என்றார். அதேபோன்று, 25 அல்லது 30 வருடங்களுக்கு பின்னரும் ஆசிரியர்களுக்கு காட்டிய மரியாதை முன்மாதிரியானதாகும். அதுபோன்று நான் யாரிடமும் கண்டதில்லை.
கேள்வி: தந்தையிடமிருந்து அவதானித்து, இன்றுவரை பின்பற்றி வரும் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் கூறமுடியுமா?
பதில்: அதிகமான சிறந்த பழக்கவழக்கங்களைக் குறிப்பிடலாம். அதில் முதன்மையானது விடயமொன்றை ஏற்பாடு செய்யும் நுணுக்கமாகும். அதிகமானோர் என்னுடன் பணியாற்றுவது சிரமமென்பார்கள். நான் 100வீத சீரான வேலையை எதிர்பார்க்கின்றேன். நானும் 100 வீதம் நடந்துகொள்கின்றேன். அதனை நான் வாப்பாவிடமிருந்தே கற்றுக்கொண்டேன். வாப்பா கட்சியை வளர்த்தெடுத்த வேகம், வெறுமனே சாய்ந்துகொண்டிருந்தால் நடைபெறுவதொன்றல்ல. சாப்பிடாமல், தூங்காமல், குடும்பத்தை பிரிந்து, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தார். உதாரணத்துக்கு கட்சி மாநாட்டை எடுத்துக்கொண்டால், யாருக்கு அழைப்பு விடுப்பதென்பதில் ஆரம்பித்து, எவ்வாறான உரைகள் அமைய வேண்டும், கட்சியின் ஏனையோர் எதனை உரையாற்ற வேண்டும், போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு டீ வழங்குவது வரை நுணுக்கமாக கவனிப்பார்.
6 வயதிலிருந்தே எனக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார். வாப்பாவின் செயலாளர் சமூகமளிக்காதபோது நடைபெற்ற சம்பவம் இன்றும் மனதில் இருக்கின்றது. உரையொன்றை சொல்வது எழுதுதல் மூலம் எனக்கு எழுதவைத்தார். நான் தட்டச்சு செய்துமுடித்ததும் பிழைதிருத்தம் செய்தார். அவரது எழுத்துக்கள் ஈசீஜீ ரிப்போர்ட் போன்றிருக்கும். அதனை அனைவராலும் வாசிக்க முடியாது.
ஒரு முறை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தைப் பற்றி பத்திரிகைகளுக்கு முழுப் பக்க கவிதையொன்றை எழுதியிருந்தார். அது தந்தை செல்வா பற்றி எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற பெயரில் பிரசுரமாகியிருந்தது. வாப்பாவின் தமிழ் புலமை குறித்து புதிதாகச் சொல்லவேண்டியதில்லை. கவிதையையும், லிப்கோ அகராதியொன்றையும் என்னிடம் தந்து மூன்று நாட்களில் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கக் கூறினார். மூன்று நாட்களாக சாம்பலாகிவிட்டேன் என்றுதான் கூறவேண்டும். மூன்று நாட்களாக முழுநேரம் ஈடுபட்டு முடித்துவிட்டேன். பின்னர் அதனை வாசிக்கக் கூறினார். பாராட்டினார். அந்த பயிற்சி மறக்க முடியாத ஒன்றாகும்.
கேள்வி: மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் எழுத்து, கலை, இலக்கிய துறை ஈடுபாடு குறித்து புதிதாகக் கூறவேண்டியதில்லை. இவ்விடயத்தில் உங்களது ஈடுபாடு எவ்வாறுள்ளது?
பதில்: இலக்கியம், கலைத்துறையில் ஈடுபாடு இல்லை என்று கூறமுடியாது. வாப்பா தமிழில் அதிக ஆர்வம் காட்டினார். நான் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதுகின்றேன். சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரம் குறித்து அண்மையிலும் ஒரு கவிதையெழுதியிருந்தேன். வாப்பா உயிரோடு இருந்திருந்தால் ஊர் பிரிப்பை ஆதரிக்க மாட்டார். அவர் ஒருநாளும் பிளவை விரும்பவில்லை. இந்த பிரச்சினை நடைபெறுவதைக் காண வாப்பா இல்லை என்பதையிட்டு சந்தோசப்படுகின்றேன். சாய்ந்தமருது விவகாரம் பூதாகரமானபோது ஆங்கில கவிதையொன்று எழுதினேன். அதுதவிர, அதிகமான ஆவணப்படங்களையும் தொலைக்காட்சி விளம்பரங்களையும் தயாரித்துள்ளேன்.
கேள்வி: நீங்கள் இதுவரை அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை. இதற்கு தந்தையின் ஆலோசனைகள் எதுவும் உண்டா?
பதில்: வாப்பா எழுதி, நான் மொழிபெயர்த்த தந்தை செல்வா குறித்த கவிதையை வாசித்து காட்டிய நாள் இரவு உணவருந்திக்கொண்டிருந்தோம். வாப்பாவும் நானும் இருக்க மூன்றாவதாக ஒருவரும் அங்கு இருந்தார். அவரது பெயர் குறிப்பிட விரும்பவில்லை. மூன்றாமவர் வாப்பாவைப் பார்த்து, இப்போது அமானையும் களத்துக்கு இறக்குவதற்கான காலம் கனிந்துள்ளது என்றார். வாப்பா அவருக்கு பதிலளிக்கும்போது, இந்த தலைமுறைக்கு நான் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டேன். அமான் எமது தலைமுறையல்ல. அமானுக்கு அரசியல் ஆசையிருந்தால், அது அவரது தீர்மானம். அதற்கு எனது ஆசிர்வாதம் என்றும் இருக்கும் என்றார்.
கேள்வி: இவ்விடயத்தில் உங்களது தீர்மானம் என்ன?
பதில்: நான் தீர்மானமொன்றுக்கு வருவதல்ல விடயம். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையைப் பார்த்தால், நீங்கள் அரசியலுக்கு வருவீரா? நாட்டுக்கோ, சமூகத்துக்கோ நன்மைகள் செய்வதற்கு அரசியலில்தான் இருக்கவேண்டுமென்று இல்லை. யாராவது அரசியலுக்கு வரப்போவதாக கூறினால், நான் கேட்பது ஏன்? என்று. நீங்கள் சமுதாயத்துக்காக என்றால் சரி. ஏதாவது ஒரு கட்சிக்காக என்றால் சரி. நீங்கள் இருக்கும் தரத்தில் இருந்து நல்ல நிலைமைக்குச் செல்வதற்காக அரசியலில் இறங்கப்போகின்றீரா? வேண்டாம். அங்கு அவரது நோக்கம் பிழையானதாக மாறுகின்றது. நாடு, சமூகம் குறித்த சிந்தனைகள் தவிர்த்து தான் என்ற சிந்தனையில் வருவது ஆரோக்கியமானதல்ல.
இந்த நாட்டின் அரசியல் பாதை குறித்து அவதானிக்க வேண்டும். இந்த கப்பல் எந்த திசையில் பயணிக்கின்றது என்பது தெளிவில்லை. ஒரு சாரார் வலதுக்கும் இன்னோர் சாரார் இடதுக்கும் திசை காட்டுகின்றார்கள். கப்பல் எங்கும் செல்லமுடியாது தேங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் யாராவது அரசியலில் நுழைய முயற்சிப்பதென்றால், அதனை அரசியல் தற்கொலை என்றே கூறலாம். அரசியலில் இணைய ஆர்வமுள்ளவர்கள் நாட்டின் அரசியல் பாதையை அவதானித்து, அந்த பாதையில் சென்று நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற முடியுமா என்பை சிந்திக்க வேண்டும்.
கேள்வி: முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போக்கு குறித்த உங்கள் அவதானம் என்ன?
பதில்: முதலாவதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றி சிந்திப்பதைத் தவிர்த்து, பிறர் குறித்தும் சிந்திக்க வேண்டும். நான், நாம் என்ற விடயங்கள் பல வருடங்களாக தொடர்கின்றது. அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை நான் மறுக்கவில்லை. கண்டியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பௌத்தர்களுடன் அல்லது இந்துக்களுடன் பழகாமல் வாழமுடியாது. இந்த நாட்டில் தொடர்ந்து வாழவேண்டுமென்றால் இது பாகிஸ்தானோ, சவூதி அரேபியாவோ இல்லையென்பதை இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
இலங்கை அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் வாழும் நாடு. அனைவருடனும் நட்புறவு பாராட்டுவதற்கு முஸ்லிம்கள் தயாராவதைத் தாண்டி, ஆசைகொள்ள வேண்டும். ஏனைய சமூகத்தவர்களின் கலாசாரங்களை அறிந்துகொள்ளவும், மதிக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகம் ஏனையோருடன் பழகக் கூடாத காரணங்கள் பலதை முன்வைப்பார்கள். ஏன் பழகவேண்டுமென்பது பற்றி கதைக்க யாரும் தயாராக இல்லை. என் வாப்பாவுக்கு ஏனைய சமூகத்தவர்களுடன் பழகுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. அவரது நண்பர் வட்டமும் அனைத்து மதத்தவர்களையும் உள்ளடக்கியிருந்தது. முஸ்லிம் நண்பர்களைவிடவும் தமிழ், சிங்கள அல்லது இந்து, பௌத்த மற்றும் கிறிஸ்தவர்கள் இருந்தனர். அவர்கள் வாப்பாவின் மரணத்திற்கு பின்னரும், வாப்பா மீது வைத்துள்ள அன்பு காரணமாக எம்மைச் சேர்ந்து நடக்கின்றனர். ஒரு மதம் அல்லது மார்க்கம் சமுதாயத்தை ஒன்றாக இணைக்க வேண்டும். மார்க்கத்தின் பெயரால் பிளவுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் வாப்பா உறுதியாக இருந்தார்.
அரசியலில் எம்மவர்கள் இன்றும் தலைவர் இப்படித்தான் சொன்னார், தலைவர் இப்படித்தான் சொன்னார் என்கின்றனர். தலைவர் முஸ்லிம் காங்கிரஸைத் தாபித்த காலத்தில் பேசியது குறித்துச் சொல்கின்றனர். யாருமே 1997ஆம் ஆண்டில் இருந்து 2000 வரை தலைவர் பேசிய விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை. அந்த காலத்திலேயே தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி குறித்து பேசினார். வாப்பா நுஆவின் தூரநோக்கு குறித்து தெளிவுபடுத்தும் போது, ’முஸ்லிம்களாக நாம் வளரவேண்டிய இடத்தை அடைந்துவிட்டோம். இதற்கு மேலும் ஒரு சமுதாயமாக மட்டுமல்லாமல் இந்த நாட்டுக்கான இலங்கையர்கள் என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டும்.’ என்றார். இலங்கையர்கள் என்ற சிந்தனையில் பயணிப்பதற்குரிய விதத்தில் முஸ்லிம்களின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும்.
(ஆதில் அலி சப்ரி)
Usefull information about late leader Ashraf. Good commendable comments and necessary sugessions for the present political situation by Mr Amaan Ashraf.
ReplyDelete