கோத்தா - மைத்திரி கொலை சதி, நாமலை சந்தித்த இந்தியர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும், மேசரிஸ் தோமஸ் எனும் குறித்த இந்திய பிரஜை சந்திக்க சென்றுள்ள போதும் அவரை சந்திக்க முடியவில்லை எனவும் அவரது அலுவலகத்தில் ஒருவரை சந்தித்துள்ளதாகவும் சி.ஐ.டி. விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைவிட குறித்த இந்திய பிரஜை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அவரது விஜேராம இல்லத்துக்கு சென்றுள்ள போதும் அவரை சந்திக்க முடியவில்லை என சி.ஐ.டி.க்கு தெரிவித்துள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் சந்தேக நபரிடம் சி.ஐ.டி. மிக ஆழமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பயங்கரவாத தடை சட்ட விதிவிதாங்களுக்கு அமைவாக இவ் விசாரணைகள் தொடர்வதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இந்நிலையில், இதுவரை இந்த கொலைச் சதி விவகாரம் குறித்து 20 இற்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்களை சி.ஐ.டி. பதிவு செய்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைய மனிதப் படுகொலை குறித்த விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்குஹெட்டி தலைமையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் கே.எம்.எம்.குமாரசிங்க உள்ளிட்டோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
இதனிடையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலிருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கி குறித்தும் சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் கிளேமோர் குண்டுடன் முன்னாள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டட நிலையில் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் எனக் கூறப்படும் ஒருவரிடமிருந்து இந்த ஸ்னைப்பர் துப்பாக்கி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்த ஸ்னைப்பர் துப்பாக்கியே காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அது குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(எம்.எப்.எம்.பஸீர்)
Post a Comment