Header Ads



சவூதியின் திட்டத்தை வரவேற்கும் ரணில், இலங்கையின் இறக்குமதிகளை குறைப்பதாக அறிவிப்பு

தற்போதைய பொருளாதார நிலைமைகளின் கீழ், 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அல்லது 1 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான இறக்குமதிகளை, அரசாங்கம் குறைக்க வேண்டியிருக்குமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (24) தெரிவித்தார்.

கடனை முகாமை செய்வது தொடர்பாக, நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஹம்பாந்தோட்டையில், டி.எஸ். சேனாநாயக்க கமவைத் திறந்துவைக்கும் நிகழ்வில், பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “நிதியமைச்சருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறோம். கடந்த வாரமும் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது. தீர்வைகளை அதிகரிப்பதன் மூலமாக, இறக்குமதிகளை 500 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் அல்லது 1 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்களால் குறைக்கவே, அரசாங்கம் எதிர்பார்க்கிறது” எனத் தெரிவித்தார். 

ஐ.அமெரிக்காவில் கைத்தொழில் உற்பத்தி அதிகரித்திருக்கிறது எனத் தெரிவித்த அவர், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் காரணமாக, அந்நாட்டு மக்கள், அதிகமாகச் செலவிடுகின்றனர் எனவும் தெரிவித்தார். அத்தோடு, ஐ.அமெரிக்காவின் வட்டி வீதங்களும் அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பிரதமர், அதனால் முதலீட்டாளர்கள், தமது பணங்களை, ஐ.அமெரிக்காவில் முதலிடுகின்றனர் எனக் குறிப்பிட்டார். இலங்கையின் பங்குப் பரிவர்த்தனையில் முதலிட்டிருந்தோரில், 400 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் அளவுக்கு, பணம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பிரதமர், எங்கே அதிக இலாபம் கிடைக்கிறதோ, அங்கேயே முதலிடுவதற்கு முதலீட்டாளர்கள் விரும்புவர் என்பது வெளிப்படை எனவும் குறிப்பிட்டார். 

“இது, எங்களால் தொடங்கப்பட்ட பிரச்சினை இல்லை. ட்ரம்ப் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட சலுகைகளும், வட்டி வீதங்களை அதிகரிப்பதற்காக அவர் எடுத்த முடிவும், இப்பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கை, ஏனைய நாடுகளையும் பாதித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார். 

எண்ணெய் விலை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், ரஷ்யா மீதும் ஈரான் மீதும், ஐ.அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடைகளின் காரணமாகவே, விலை அதிகரித்துள்ளது எனத் தெரிவித்ததோடு, ரூபாயின் மதிப்புக் குறைந்தமையும் பங்களித்துள்ளது என்று தெரிவித்தார். எனினும், அடுத்த 6 மாதங்களுக்கு, தினந்தோறும் 1.5 மில்லியன் பரல்களைச் சந்தையில் விடுவதற்கு, சவூதி அரேபியா சம்மதித்துள்ளது எனத் தெரிவித்த அவர், இது, நிவாரணமாக அமைந்துள்ளதெனவும் குறிப்பிட்டார். 

இதேவேளை, இப்பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கேள்வியெழுப்பியிருந்த நிலையில், முன்னைய அரசாங்கம், வர்த்தகக் கடன் வாங்கலில் ஏன் ஈடுபட்டது எனவும், பயன்தராத செயற்றிட்டங்களில் எதற்காக முதலிட்டது எனவும் கேள்வியெழுப்ப விரும்புவதாக, பிரதமர் பதிலளித்தார். 

அத்தோடு, இப்பிரச்சினையிலிருந்து, அரசாங்கம் தப்பியோடி விடாது என, பிரதமர் உறுதியளித்தார். “மறை வளர்ச்சியைப் பதிவுசெய்த பொருளாதாரமொன்று எனக்கு வழங்கப்பட்டது. அதை நான் தீர்த்தேன். ஆகவே, தற்போதைய நெருக்கடியையும் நான் தீர்ப்பேன். ஆகவே, என்னை நம்புமாறு, மக்களிடம் கோருகிறேன்” என, பிரதமர் மேலும் குறிப்பிட்டார். 

-யொஹான் பெரேரா-

No comments

Powered by Blogger.