Header Ads



கேள்விக்குறியாகும் தர்ஹா நகர், கல்வியியற் கல்லூரியின் எதிர்காலம்

  – ஹெட்டி ரம்ஸி, அல்லையூரான் – ஸமா

இலங்கையில் காணப்படுகின்ற பத்தொன்பது கல்வியியற் கல்லூரிகளுள் முஸ்லிம் பெண்களுக்கான ஒரு கல்வியியற் கல்லூரியாக காணப்படுவது அளுத்கமை, தர்ஹா நகரில் அமைந்துள்ள தர்ஹா நகர் தேசிய கல்வியியற் கல்லூரியாகும். இது 1941ம் ஆண்டு சேர் ராஸீக் பரீட், டொக்டர் எம்.சி. கலீல் ஆகியோரின் முயற்சியினால் உருவாக்கப்பட்டதோடு இதற்கான ஐந்து ஏக்கர் காணியும் தர்ஹா நகரைச் சேர்ந்த ஐ.எப்.எம்.மஹ்மூத் என்ற முஸ்லிம் தனவந்தர் ஒருவரினாலேயே வழங்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியானது 1941 தொடக்கம் 1957 வரை 16 வருடங்கள் முஸ்லிம் ஆண்களுக்கான ஆசிரிய பயிற்சியை வழங்கியது. பின்னர் முஸ்லிம் பெண்களுக்கான ஆசிரிய பயிற்சிக் கலாசாலையாக உருவாக்கப்பட்டு தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக இன்று வரை பெண்களுக்கான ஒரு தனியான கல்லூரியாக இயங்கி வருகின்றது.

இக்கல்லூரியானது கடந்த 2001ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளை மூடும் திட்டத்தின் அடிப்படையில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் தர்ஹா நகர் தேசிய கல்வியியற் கல்லூரியாக மாற்றம் பெற்றது. மாற்றம் பெற்றதிலிருந்து கடந்த 2015ம் ஆண்டு வரை திருமதி. நூறுல் ஹாரிஜா, யூ.எல். புஹாரி, பீ.றிஸ்வி ஆகிய முஸ்லிம் பீடாதிபதிகளே கடமையாற்றியுள்ளனர். 2015ம் ஆண்டு தொடக்கம் திரு.அறிவழகன் என்ற தமிழ் சகோதரருக்கு பீடாதிபதி பதவி மாற்றப்பட்டுள்ளது.

இங்கு சேவையாற்றுகின்றவர்களில் பீடாதிபதி, மற்றும் கல்விப் பிரிவுக்கு பொறுப்பானவர் சகோதர தமிழ் சமயத்தை சார்ந்தவர்களாகவும், ஆரம்பப் பிரிவுக்கு பொறுப்பானவர் முஸ்லிமாகவும் காணப்படுவதுடன், ஒன்பது முஸ்லிம் விரிவுரையாளர்களும், தமிழ் விரிவுரையாளர்கள் நான்கு பேரும், சிங்கள விரிவுரையாளர் ஒருவருமாக மொத்தம் 18 விரிவுரையாளர்கள் கடமையாற்றி வருகின்றனர். இதில் மூன்று பேர் இவ்வருடம் நியமிக்கப்பட்டவர்களாவர்.

இந்த கல்வியியற் கல்லூரிக்கு 27 விரிவுரையாளர்களின் தேவை காணப்படுகின்ற அதே வேளை 15 விரிவுரையாளர்களே இதுவரை காலமும் கடமையாற்றி வந்துள்ளனர். இதில் கல்வியமைச்சோ, கல்விக் கல்லூரி கிளையோ, அரசியல்வாதிகளோ ஏன் பாராமுகமாக இருக்கின்றார்கள்? இது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கல்லூரியின் மீது கொண்ட காழ்புணர்வா என்ற சந்தேகம் வலுக்கிறது.

முஸ்லிம் மாணவிகளை பெரும்பான்மையாக கொண்டதாக இக் கல்லூரி காணப்பட்ட போதிலும் இங்கு கடமையாற்றுகின்ற விடுதிப் பொறுப்பாளர்கள் மூவரும் சிங்கள சமூகத்தை சார்ந்தவர்களாக காணப்படுவதனால் மாணவிகள் தங்களுடைய தேவைகளை தெரிவிப்பதிலும், பெற்றுக் கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இக் கல்லூரியில் காணப்படுகின்ற கற்கை நெறிகளை அவதானிக்கும் போது, இது கல்வியியற் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட போது காணப்பட்ட ஆரம்பக் கல்வி, தமிழ், மனைப்பொருளியல் ஆகிய கற்கை நெறிகளே இன்று வரை காணப்படுகின்றது. இப்பகுதியில் காணப்படுகின்ற பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் அடிப்பைடையில் இஸ்லாம், கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம் போன்ற எந்த ஒரு கற்கை நெறிகளும் அறுபது வருட கால வரலாற்றைக் கொண்ட இக்கல்லூரியில் ஆரம்பிக்கப்படவில்லை. இதில் முஸ்லிம் தலைமைகள் கூட பாரா முகமாக இருப்பது துரதிஷ்டமாகும்.

குறிப்பாக இஸ்லாம் பாடநெறியினை நோக்குகையில் இஸ்லாம் பாடநெறிக்காக வருடாந்தம் 20 பேர் அளவிலான பயிலுநர்களே அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரிக்கு உள்ளீர்க்கப்படுகின்றார்கள். இது நாட்டில் நிலவுகின்ற இஸ்லாம் பாட ஆசிரியர் வெற்றிடத்தை முழுமையாக பூர்த்தி செய்வதாக இல்லை. கடந்த வருட கணக்கெடுப்பின்படி களுத்துறை வலயத்தில் மாத்திரம் 24 இஸ்லாம் பாட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறிருக்கையில் இக்கல்லூரியில் இஸ்லாம் கற்கை நெறியையாவது ஆரம்பித்து மாணவர்களை இணைப்பதற்கு இன்னும் சிந்திக்கத் தொடங்காமலிருப்பது ஆச்சரியமானது.

இன்றைய நவீன உலகில் தகவல் தொழிநுட்பம் இன்றியமையாதது என்பது சொல்லி விளங்க வேண்டியதில்லை. ஆனால் இக்கல்லூரியில் தகவல் தொழிநுட்ப பாடம் இருந்தும் அதனை கற்பிப்பதற்கு விரிவுரையாளர்கள் இல்லை, கணனி கூடத்திலுள்ள ஒரு சில கணணிகள் மாத்திரமே இயங்குநிலையில் உள்ளது. இதனால் மாணவிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இதன் நிலை ஒரு பாடசாலையை விடவும் பரிதாபகரமாக காணப்படுகின்றது எனலாம்.

இக்கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட பயிலுநனர்கள் கற்கை நெறிகளை தொடர்ந்து வருகின்ற நிலையில் இவர்களுக்கான விடுதி வசதிகள் இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. தற்போதும் கூட முன்னர் சாப்பாட்டறையாக பயன்படுத்தப்பட்ட கட்டிடமொன்று விடுதியாக்கப்பட்டுள்ளடன், அதில் மலசல கூட, குளியலறை வசதிகள் கூட இல்லாமல் காணப்படுகின்றது. இதனால் இரவு வேளைகளில் அவசர தேவைகளுக்கும் மற்றைய விடுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் மாணவிகள் உள்ளனர். இது ஒரு பாதுகாப்பற்ற விடுதியாகவும் காணப்படுகின்றது.

இங்கு காணப்படுகின்ற விரிவுரையாளர் விடுதிகள், நிருவாக கட்டிடங்கள், மாணவர் விடுதிகள் யாவும் ஆசிரிய கலாசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களாகவே காணப்படுகின்றது. பல வருடங்களுக்குப் பின் கடந்த வருடம் மாத்திரமே விடுதி, வகுப்பறைக்கான இரு மாடிக் கட்டிடங்கள் இரண்டு வழங்கப்பட்டுள்ளது. இதுவும் கல்லூரியின் தேவையான அளவை பூர்த்தி செய்வதாயில்லை.


இக் கல்லூரியிலுள்ள மாணவிகளுக்கான தனியான நூலக வசதிகள் இல்லை, இருக்கின்ற நூலகம் ஆசிரிய கலாசாலை கட்டிடத்திலேயே அமைந்துள்ளதால் நூல்களை பெறுவதில் மாணவிகள் பெருமளவில் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதே போன்று வகுப்பறை வசதிகளும் சீரற்றுக் காணப்படுவதுடன் ஆரம்பகால தளபாடங்களே இன்னும் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் இந்த கல்வியியற் கல்லூரியில் காணப்படுகின்ற பிரதான பிரச்சினைகளுள் ஒன்றாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பாவிக்கின்ற நீர் அசுத்தமாக காணப்படுகிறது. இங்கு அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், கடந்த வருடத்தில் நீர் பிரச்சினையால் பல மாணவிகள் நோய்த் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கல்லூரியைச் சுற்றிக் காணப்படுகின்ற கல்லூரி வளாகம் முழுவதும் பற்றைக் காடுகள் வளர்ந்து காணப்படுவதால் விஷப்பாம்புகளின் புளக்கம் அதிரித்துள்ளது. சென்ற வருடம் ஒரு மாணவி விஷப்பாம்புக்கடிக்கு உள்ளாகி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பணியாளர்கள் இருந்தும் இதற்கு இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இக் கல்விக் கல்லூயில் கடமையாற்றுகின்ற விரிவுரையாளர்கள் சிலர் முறையற்ற விதத்தில் கதைப்பதனால் மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் மாணவிகளின் சிறிய பிரச்சினைகளையும் பெரிதுபடுத்தி ஏனைய மாணவிகளின் முன் வைத்து தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அது மட்டுமல்லாது மாணவிகள் விடுமுறை பெறுகின்ற போது சிலருக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதுடன் இதற்கு சில விரிவுரையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு வகையிலும் பின்தங்கிய நிலையில் காணப்படும் இக்கல்லூரியின் இந்நிலைக்கு இங்கு சேவையாற்றுகின்ற ஒரு சிலரும் காரணமென்று விமர்சிக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இக்கல்லூரியின் பிரதி பீடாதிபதியாக கடமையாற்றுபவர் இக் கல்லூரியில் பிரதி பீடாதிபதியாகவும், ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் முகாமையாளராகவும் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுன்றது. ஒரே நேரத்தில் இரு வேறு சேவையில் இருக்கும் இவர் தமக்கு ஏற்றாற் போன்று கல்லூரியை வழிநடாத்துவதுடன் பல செயற்றிட்டங்களுக்கு தடையாக இருப்பதாகவும் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க இக்கல்லூரியினுடைய இன்றைய நிலையை நோக்கும் போது கேட்பதற்கு நாதியற்ற, அநாதரவான நிலையிலேயே காணப்படுகின்றது எனலாம். இக்கல்லூரியானது உருவாக்கப்படும் போது இதில் முஸ்லிம் பெண்கள் 80 வீதமும், தமிழ் பெண்கள் 20 வீதமும் உள்வாங்கப்பட வேண்டுமென அறிக்கையிடப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக தென் மாகாணம், மேல் மாகாணம் ஆகியவற்றில் காணப்படுகின்ற தமிழ் இனத்தை இணைக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இந்நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரிக்கு 90 வீதமான தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கப்படுகின்ற அதே வேளை தர்ஹா நகர் கல்வியியற் கல்லூரிக்கும் உள்வாங்கப்படுகின்றார்கள், அதே போன்று ஏனைய பிரதேசங்களிலிருந்தும் தமிழ் மாணவிகள் உள்வாங்கப்படுவதால் முஸ்லிம் பயிலுநர்களின் உள்ளீர்ப்பு வீதம் குறைவடைந்து அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலை தொடர்ந்து கொண்டே செல்லுமாக இருந்தால் தர்ஹா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி என்பது பெயரளவில் மாத்திரமே இருக்கும். எதிர்காலத்தில் இக் கல்லூரியின் இருப்பு என்பது கேள்விக்குறியாகி விடுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே அரசியல் தலைமைகளும், புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் காத்திரமான தீர்வொன்றினை பெறுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இது எம் எதிர்கால சமூகத்திற்கு செய்யும் மிகப் பெரும் தொண்டாக அமையுமென்பது திண்ணம்.

1 comment:

  1. முஸ்லீம் அரசியல்வாதிகளிடம் முஸ்லிம்களின் கல்வியை முன்னேற்றக்கூடிய எந்த திட்டங்களை காண முடியவில்லை .புதிய திட்டங்களை எவ்வாறு இருந்த போதிலும் தற்போது இருக்கின்ற வளங்களையும் பாதுகாக்க தெரியவில்லை .நழீம் ஹாஜியார் வாழ்ந்த பிரதேசத்தில் அவரின் மறைவிட்கு பிறகு அவர்போன்று கல்விக்கு உதவி செய்யக்கூடிய எந்த ஹாஜியையும் அந்த பிரதேசத்தில் காண முடியாதுள்ளது

    ReplyDelete

Powered by Blogger.