ஜம்இய்யத்துல் உலமாவிற்கு சென்ற நாமல் - அழகான விளக்கம் வழங்கிய ரிஸ்வி முப்தி
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று 2018.09.03 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகைத் தந்தார். சமயத்தலைவர்களை சந்தித்து நாட்டின் சமகால நிலமைகளையும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றியும் எடுத்துரைக்கும் வண்ணமே அவரது வருகை அமைந்திருந்தது. அவர் தன் வருகையின் நோக்கம் பற்றி பேசும் போது நாட்டின் தற்கால அரசியல் நிலைமைகளையும், பொருளாதார வீழ்ச்சியையும், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் கூறி இதனை அரசாங்கத்திற்கு எத்தி வைக்கச் செய்வதே நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகுமென குறிப்பிட்டார்.
அவரது பேச்சைத் தொடர்ந்து உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி அவர்கள் சமயத்தலைவர்களை சந்திக்கும் வரிசையில் நீங்கள் இங்கு வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். இவ்விஸ்தாபனம் 1924 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து சமயப் பணியை செவ்வனே செய்து வருகின்றது. எந்தவொரு அரசியல் சாயத்தையும் பூசிக் கொள்ளாத எமது இந்நிறுவனம் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுக்கு ஒத்துழைத்து வந்துள்ளது. அவ்வாறே நாட்டில் சகல சமூகத்தவர் மத்தியிலும் சமாதானமும் சகவாழ்வும் மலர தன்னாலான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
ஜம்இய்யா எந்தவொரு பிரச்சினையையும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமென உறுதியாக நம்புகிறது. அந்த வகையில் தான் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களோடு கூட நாம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். தொடரான அரசியல் பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் இதனை உங்களது இலட்சியமாக எடுத்துக் கொள்வீர்கள் என்று எதிர்ப்பார்க்கின்றேன்.
காலஞ்சென்ற தென்னாபிரிக்க அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாவின் அரசியல் சாணக்கியத்தை எல்லா அரசியல் வாதிகளும் எடுத்து நடப்பதினூடாக சிறந்த இலங்கையை கட்டியெழுப்ப முடியுமென நம்புகின்றேன். வளர்ந்து வரும் வாலிப அரசியல் வாதியான உங்களுக்கு இந்த விடயங்களை கூறி வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நாம் எல்லோரும் இலங்கையராவர். அந்த உணர்வோடு தான் நாம் இந்நாட்டை வளப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆட்சி செய்தவர்கள் மான்டு விட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் தன்செயற்பாடுகளில் தூய்மையும், நேர்மையும் கொண்டு செயல்படுவதே கடமையாகும். அந்த வகையில் உங்களது சகல முயற்சிகளும் அமையுமென எதிர்பார்க்கின்றேன். இந்நாட்டில் சகல சமூகங்களும் ஐக்கியமாக வாழவும், பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் இந்நாடு முன்னேற்றம் அடையவும் எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டுகிறேன் என்று தனதுரையை முடித்தார்.
இறுதியாக, மிகவும் பெறுமதி வாய்ந்த கருத்துக்களைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக உங்களுக்கும் இந்நிறுவனத்திற்கும் நன்றியும் செலுத்துகிறேன். இன்னும் பல விடுத்தம் இங்கு வருகை தந்து கலந்துரையாட விரும்புகிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறி விட்டு ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தில் இருந்து விடைபெற்றார்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Subhanallah
ReplyDeleteMay Allah bless longliveness to mufthi sab.
Mashaallah Good speach from Sheik Mufthi Sab
ReplyDelete