மைத்திரிபால கொலை சதித்திட்டம், அபாயகரமான விடயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித்திட்டம் என்று வெளியாகியுள்ள தகவலை சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாத அபாயகரமான விடயம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஊழல், போதைப் பொருள் ஆகியவற்றுக்கு எதிரான கொள்கை பிடிப்புள்ள தலைவரான ஜனாதிபதிக்கு இப்படியான அச்சுறுத்தல்கள் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டதாக நாமல் குமார என்ற நபர் வெளியிட்ட தகவலுக்கு அமைய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகளில் ஜனாதிபதிக்கு இப்படியான கொலை அச்சுறுத்தல் இருந்தது என்ற விபரம் வெளியானால், அவரது பாதுகாப்பு போதுமானதா என்பதை பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
நாட்டின் தலைவர் மட்டுமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி சம்பந்தமான வெளியாகியுள்ள இந்த தகவல் கட்சிக்குள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான குரல் பதிவில் இருக்கும் குரல் யாருடையது என்பதை நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிய குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுக்கும்.
அத்துடன் வழக்கை தொடருமளவிற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாமல் யாருடைய தேவைக்காக படையினர் கைதுசெய்யப்படுகின்றனர் என்பது கண்டறிய வேண்டும். இது எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடிய நிலைமையல்ல.
உயர் பதவிகளை வகிக்கும் படையினர் கைது செய்வது குறித்து முப்படை தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தாத நிலைமை காணப்படுகிறது எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment