Header Ads



நிந்தவூர் வைத்தியசாலையில், நடந்த கொடூரம் . பைசல் காசிம் எங்கே...?

நிந்தவூரை சேர்ந்த சீனி முகம்மது யாக்குப் அல்லது அஸீஸ் என்பவர் 08.09.2018 அன்று அவருக்கு நீரிழிவு நோய் காணப்பட்டதனால் தனது காலில் ஏற்பட்டு ஆறியிருந்த சிறிய புண்ணொன்றை சுகமாக்குவதற்காக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். குறித்த புண் ஆறிய பின்னரும்  நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சுமார் 7 நாட்களின் பின்னர் 15.09.2018 அன்று பகல் நேரத்தில் வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்திருந்தார்.

சீனி முகம்மது யாக்குப் வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கு முறையாக வைத்தியர்கள் சிகிச்சை வழங்கவில்லை எனவும், அவர் மரணத்தறுவாயில் 15.09.2018 அன்று கஸ்ட நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு வைத்தியரால் சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும், அங்கு கடமையிலிருந்த தாதி ஒருவர் வைத்தியரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மரணத்திற்கு போராடிக்கொண்டிருப்பவரை வைத்தியரிடம் அவரது உபாதையை கூறுமாறு குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இத்தகவல்கள் மரணமடைந்தவரின் நெருங்கிய உறவினர்களாலும் உறுதிப்படுத்தப்படுவதுடன் குறித்த மரணித்தவர் சிகிச்சை பெற்றுவந்த விடுதியில் சிகிச்சை பெற்ற ஏனைய நோயாளிகளினாலும் உறுதிப்பட தெரிய வருகின்றன.

மேலும், மரணமடைந்தவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சந்தர்பத்தில் மரணித்தவரின் மகன் விடுதியில் கடமையில் இருந்த தாதியிடம் சென்று தனது தந்தை உயிருக்கு போராடுவதாகவும், வந்து சிகிச்சையளிக்குமாறும் மன்றாடிய வேளையில் அத்தாதி "அவருக்கு சேலைன் பாச்சப்பட்டுள்ளது அவர் குணமடைந்துவிடுவார், நீர் போய் உட்காரும்" என பொறுப்பற்ற வித்த்தில் பதிலளித்துள்ளமை தெரியவருகின்றது.

மேலும், மரணமடைந்தவரின் பிரேத்த்தினை உறவினர்களுக்கு விடுவிக்கும் போது மரணமடைந்தவரின் மூத்த மகனால் "நாங்கள் எதுவித சட்ட நடவடிக்கைக்கும் செல்ல மாட்டோம்" என எழுதி ஒப்பமிட்டு குறித்த வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்ட  பின்பே பிரேதம் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒரு ஆவணத்தினை ஒப்பமிட்டு வழங்காத பட்சத்தில் பிரேத்த்தினை பரிசோதனை மேற்கொள்ளாது வழங்க முடியாது என மரணமடைந்தவரின் மகன் மற்றும் நெருங்கிய உறவினர்களை வைத்தியசாலை நிருவாகம் கட்டாயப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு எழுத்து மூலமான ஆவணத்தை பெற்று கொள்ளுமாறு குறித்த வைத்தியருக்கு வைத்தியசாலை அத்தியட்சகரே தொலைபேசி மூலம் பணித்த்தாகவும், எவ்வாறு கடிதம் எழுதப்படவேண்டும் என சிரேட்ட தாதியொருவர் உச்சரித்த்தாகவும் சம்பவத்தின் போது அங்கிருந்த மரணமடைந்தவரின் குடும்பத்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், இந்நிலைமைகள் மரணமடைந்தவரின் நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் தீவிர அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. இதேவேளை, வைத்திய அத்தியட்சகரிடம் மரணமடைந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் தொடர்புகளை ஏற்படுத்தி தமது தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதேவேளை, வைத்திய அத்தியட்சகர் மரணம் நிகழ்ந்த அதேதினம் 15.09.2018 அன்றுஇரவு மரணமடைந்தவரின் உறவினர் ஒருவரை வைத்தியசாலையில் சந்தித்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் உரையாடியுள்ளார். இவ்வுரையாடலின் போது வைத்தியர்  மரணத்திற்கான காரணத்தை (cause of death) வெளிப்படுத்தி படிவத்தை தயாரித்த பின்னர் மரணமடைந்தவரின் மகனிடம் அவ்வாறு ஒரு ஆவணத்தை பெற்று கொண்ட நோக்கம் என்ன என கேட்கப்பட்டதாகவும் அதற்கு வைத்திய அத்தியடசகர் முறையான பதிலை வழங்கவில்லை எனவும் தெரிய வருகின்றது. மேலும், மரணமடைந்தவரின் தலைமாட்டு சிட்டைகளை பார்வையிட வழங்குமாறு கேட்ட போது அதனை வழங்க முடியாது எனவும் வைத்திய அத்தியட்சகர் நிராகரித்துள்ளார்.

அன்றைய தினம் வைத்திய அத்தியட்சகர் சீனி முகம்மது யாக்கூப் என்பவரது மரணம் குறித்தும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் உள்ளக விசாரணை ஒன்றினை உடனடியாக ஆரம்பிப்பதாகவும், விசாரணையின் முடிவினை அறிவிப்பதாகவும் வாக்களித்திருந்த போதிலும் தற்போது வரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனி முகம்தமது யாக்கூப் தனக்கு காணப்படுகின்ற நீரிழிவினால் தனது காலில் ஏற்பட்டிருந்த ஆறிய சிறு காயத்திற்கு சிகிச்சை பெறவே வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்தார். இருப்பினும் உடலின் இரத்த்த்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்து உயர் குருதி அழுத்தம் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளமை மரணத்திற்கான காரணமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உடலின் காலில் ஏற்பட்டு ஆறிய சிறு காயத்திற்காக சிகிச்சை பெற்றுவந்த நபருக்கு உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கும் வகையில் என்ன நடந்த்து என்பது மர்ம்மாகவே காணப்படுகின்றன. இவ்விடயம் குறித்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு குறித்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு உண்டல்லவா. இதனை அறியும் உரிமை மரணித்தவரின் குடிம்பத்திற்கும் பொதுமக்களுக்கும் உண்டல்லவா?

இந்நிலையில் மரணமடைந்தவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என சுமார் 30 நபர்கள் தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் வைத்திய அத்தியட்சகருக்கு விண்ணப்பம் மேற்கொண்டுள்ளனர். இவ்விண்ணப்பத்தில் சீனிமுகம்மது யாக்கூப் என்பவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் மற்றும் தாதிமாரின் பெயர் விபரங்கள், வைத்திய அனுமதி சிட்டை மற்றும் தலைமாட்டு சிட்டைகள், மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தும் படிவம், மரண பிரகடன சிட்டை என்பவற்றுடன் மரணித்த தினமன்று அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் போன்ற விபரங்களை வேண்டியுள்ளனர்.

இவ்விபரங்களை குறித்த கால வரையறையினுள் வழங்க வைத்திய அத்தியட்சகர் தவறும் பட்சத்தில் தகவல் உரிமை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு மேற்கொள்ளவிருப்பதாகவும், மேலும் இவ்விடயம் குறித்து சுமார் ஆயிரம் நபர்களின் கையெழுத்துக்களுடனான தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான ஏற்பாடொன்றை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக மரணமடைந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, நிந்தவூர் வைத்தியசாலைக்கு எதிராக ஏற்கனவே தகவல் உரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் வைத்தியசாலை பற்றிய பல தகவல்களை வழங்க மறுத்த காரணத்திற்காக RTIC Appeal/234/2018 எனும் வழக்கு விசாரணை தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக மேலும் முறையீடுகள் ஆணைக்குழுவிற்கு செல்லும் போது ஆணைக்குழு அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.