தேசிய காற்பந்தாட்ட களத்தில், பலகத்துறை நுஸ்லானும், நுஸ்கானும்
தமக்கான அடையாளமாக காற்பந்து விளையாட்டை தேர்ந்தெடுத்து தேசிய அளவில் உச்சம் தொட்ட சகோதரர்கள் இருவரைப் பற்றி இவ்வாக்கம் பேசப்போகின்றது.
முகம்மது நபீFலுல்லாஹ் – அலீமா பாயிஸா தம்பதிகளின் புதல்வர்களான முஹம்மத் நுஸ்கான் மற்றும் முஹம்மத் நுஸ்லான் ஆகிய காற்பந்து நட்சத்திரங்கள் நீர்கொழும்பு, பலஹத்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.
தற்போது 23 வயதான முஹம்மத் நுஸ்கான், நீர்/அல்-பலாஹ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். பாடசாலை மைதானத்திலிருந்து ஆரம்பித்த இவரது காற்பந்து வாழ்க்கை, “நிகம்பு யூத்” அணியில் மிளிர்ந்து அதன் தலைவராகவும் செயற்பட்டு, இலங்கை வான் படை (SL Air Force) அணி வரை ஜொலிக்க வைத்திருக்கின்றது. தற்போது ரத்னம் கழகத்தில் விளையாடி வரும் இவர், 2013 ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டில் இடம்பெற்ற சர்வதேச போட்டியில் இலங்கை அணி சார்பில் விளையாடி உள்ளார்.
2016 ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற 12 ஆவது (Saff Suzuki Cup) தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும், அதே வருடத்தில் பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்ற Banga Bandhu Gold Cup – 2016 போட்டிக்கு தெரிவாகியும் உள்ளார்.
இந் நிலையில், தற்போது LB Finance நிறுவனத்தில் பணி புரியும் இவர், நிதி நிறுவனங்களுக்கிடையிலான HNB vs LB காற்பந்துப் போட்டியிலும் செம்பியன் கிண்ணத்தை வென்றார். தொடர்ந்து தேசிய அணியில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள சிறப்பாக தனது திறன்களை வெளிப்படுத்தி வருகின்றார் நுஸ்கான்.
“நடை பழகும் நாட்களில் கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள் தம்பிகள். சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அனைத்தும் அண்ணன்களே” என்கிறது ஒரு கவிதை. அந்த வகையில் மூத்த சகோதரர்களே இளையோர்க்கு முதல் முன்மாதிரிகளாகவும், வழிகாட்டிகளாகவும் இருப்பர். நுஸ்கான் சென்ற வழியிலேயே உச்சம்தொட நுஸ்லான் காட்டிய ஆர்வமும் அந்த வகையில் வெற்றி கண்டது எனலாம்.
நுஸ்கானைப் போன்றே பாடசாலை மட்ட காற்பந்து போட்டிகளில் தனது கால்களை வலுப்படுத்த ஆரம்பித்த நுஸ்லான், “நிகம்பு யூத்” அணி, ரத்னம் கழகம், இலங்கை வான் படை (SL Air Force) அணி என தன்னை படிப்படியாக உயர்த்தி, 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்ற 19 வயதின் கீழ் ஆசிய கால்பந்தாட்ட தகுதிகான் சுற்றுப்போட்டிக்கும் தெரிவானார். அதே ஆண்டில் சீனாவில் இடம்பெற்ற 19 வயதின் கீழ் கால்பந்தாட்டப் போட்டிக்கும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தும் செல்லவில்லை.
நுஸ்லானும், நுஸ்கானும் இணைந்து பல்வேறு பிராந்திய போட்டிகளிலும் அண்மைய காலங்களில் கலக்கி வருகின்றனர். Air Force Matches, Negomo Youth Trophies, Negombo Mayor’s Cup, Red Rose Trophy ஆகியன இதற்கு சிறந்த உதாரணங்கள்.
காற்பந்தாட்டத்தில் புதிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற நம்பிக்கையை இவர்களுக்குள் விதைத்த பெற்றோர், பாடசாலை சமூகம், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், ஊர் மக்கள், ஆதரவாளர்கள் மற்றும் இரு சகோதரர்களுக்கும், மூன்று சகோதரிகளுக்கும் சீரிய வழிகாட்டலை ஊக்கத்துடன் வழங்கிவரும் நுஸ்கான், நுஸ்லானின் மூத்த சகோதரர் நுப்ரி ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.
1996, 1997 மற்றும் 2002 ஆகிய மூன்று ஆண்டுகளில் அந்தந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான FIFA விருதை வென்று, 96/97 பருவத்திற்கு பின்னர் பலராலும் அதற்கு முன்பு காற்பந்தாட்டப் போட்டிகளில் பேசப்படாத வகையில் மிகச்சிறப்பாக விளையாடிய, பந்தை நுணுக்கமாகக் கையாண்டு எதிராளிகளை எதிர்கொண்டு நிறைவு செய்யும் திறன் மற்றும் பலமுறை காயங்களிலிருந்து உற்சாகத்துடன் மீண்டு வந்த, உலகளவில் கால்பந்து ரசிகர்கள் பலரை ஈர்த்த, பிரேசிலைச் சேர்ந்த முழுநேரக் காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை இவர்கள் தங்களுக்கு முன்மாதிரியாகக் கொண்டு விளையாடுகின்றனர்.
சிறு வயதில் இருந்தே குடும்ப ரீதியாக நுஸ்கானுக்கும், நுஸ்லானுக்கும் காற்பந்து விளையாட்டு மீது காட்டப்பட்ட ஆர்வமும், மாலை நேரங்களில் நண்பர்கள் சகிதம் பயிற்சிகளின் போதான திறன் வெளிப்பாடுகளுமே இவர்களை தொடர்ந்து உச்சம்தொட வைக்கும் எரிபொருட்கள்.
– அனஸ் அப்பாஸ் –
Post a Comment