பலஸ்தீனுக்காக வாயைத்திறந்தார் ஜனாதிபதி
-நியூயோர்க்கிலிருந்து எம்.பி.எம்.பைறூஸ்-
பலஸ்தீன விவகாரம் தொடர்பில் ஐ.நா. உட்பட உலக நாடுகள் கூடுதல் கரிசனை காட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை, பலஸ்தீனுக்கு ஆதரவாகத் தொடர்ந்தும் குரல் கொடுக்குமெனவும் வலியுறுத்தினார்.
நேற்று முன்தினம் ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.
"சர்வதேச அரசியல் சூழலை எடுத்து நோக்கினால் அவற்றில் பலஸ்தீன விவகாரம் மிகவும் முக்கியமானதாகும். பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் விரிவானதும் வலுவானதுமான கவனயீர்ப்பை உலக நாடுகளிடமிருந்து வேண்டி நிற்கின்றன.
பலஸ்தீன விவகாரத்திற்கு தீர்வுகாண வேண்டுமானால் இதில் சர்வதேச சமூகம் தற்போது காட்டும் கரிசனையை விடவும் கூடுதல் கரிசனை செலுத்தப்பட வேண்டும்.
இலங்கை எப்போதும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்பதுடன் அவர்களது நெருக்கடிகளிலும் பங்கெடுத்து வருகிறது என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பலஸ்தீன விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை இதுவரை முன்னெடுத்த பணிகளை விடவும் அதிக முயற்சிகளை முன்னெடுக்கும் என நம்புகிறேன்" என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தனது உரையில் பெயர் குறிப்பிட்டு மற்றொரு நாட்டுக்காக குரலெழுப்பியமை பலஸ்தீனுக்காக மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli
Alhamthulillah
ReplyDeleteFree free Palestine