இந்நியாவிடம் வீழ்ந்தார் மகிந்த, இதோ அவரது பேட்டி...!
2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்றும், தாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்று முன்மொழியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அந்தப் பொறிமுறை, 2008-9 காலப்பகுதியில், விடுதலைப் புலிகளுடனான போரின் போது, இந்திய- சிறிலங்கா உறவுகளை ஒருங்கிணைப்பதற்காக, இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்,வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய்சிங் ஆகியோரையும், சிறிலங்கா தரப்பில் பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, லலித் வீரதுங்க ஆகியோரையும் கொண்டு உருவாக்கப்பட்ட மூவரணியைப் போன்றதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் செவ்வியில் சில முக்கியமான கேள்விகளும், அதற்கு மகிந்த ராஜபக்ச அளித்துள்ள பதில்களும் வருமாறு-
இந்தியாவுடன் இறுக்கமான உறவை வைத்திருக்கிறீர்கள். உங்களின் இந்தப் பயணம், 2015இற்குப் பின்னர் மோடி அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான சமிக்ஞையா?
பதில்- ஆம், 2015 ஆம் ஆண்டுக்கு தேர்தல்களுக்கு முன்னரும், பின்னரும், நரேந்திர மோடி அரசாங்கத்துக்கும் எமக்கும் நிறைய தவறான புரிந்தல்கள் இருந்தன. தற்போது அதனை நகர்த்துவதற்கான நேரம் வந்துள்ளது.
2015 மார்ச்சில், ‘தி ஹிந்து’வுக்கு அளித்திருந்த செவ்வியில், உங்களின் தோல்விக்குக் காரணம் என்று, றோ புலனாய்வுப் பிரிவை குற்றம்சாட்டியிருந்தீர்கள். சில வாரங்களுக்கு முன்னர், சிறிலங்காவின் அரசியல் விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது என்று கூறியிருந்தீர்கள். அது குறித்து கவலைப்படுகிறீர்களா?
பதில் – அது இந்தியாவை மாத்திரமல்ல, நான் இந்தியாவைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. வேறு எந்தத் தேர்தல்களிலும், வேறு எவருமே தலையீடு செய்யக் கூடாது என்று தான் கூறினேன்.
இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம். யாரை அதிகாரத்துக்கு கொண்டு வருவது என்பது மக்கள் முடிவு செய்ய வேண்டிய விடயம். அது தான் எனது மனதில் உள்ளது.
அந்த நேரத்தில் என்ன செய்தார்கள், என்ன தவறு நடந்தது என்று இப்போது அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
எனவே, நாங்கள் கடந்த காலத்தை மறக்க வேண்டும். இது முன்நோக்கிச் செல்வதற்கான நேரம்.
உங்களின் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுடனான விடயத்தில் எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?
பதில் – எமது முன்னுரிமைக்குரிய விடயமாக முதலீடு தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அத்துடன், சிறந்த தொடர்பாடல்.
விடுதலைப் புலிகளுடனான போரின் போது நாங்கள் ஒரு மூவரணி என்ற பொறிமுறையை வைத்திருந்தோம். இரண்டு தரப்பிலும் தலா மூன்று பேர் கொண்ட அந்த அணி, நள்ளிரவிலும் கூட விடயங்கள் குறித்து கலந்துரையாடியது.
அதுபோன்றதொரு பொறிமுறை பொருளாதார நோக்கங்களுக்காகவும் தேவைப்படுகிறது.
Post a Comment