புரைலர் கோழி போன்று, அவசரமாக முப்திகள் பிறக்கிறார்கள் - புதிய சட்டம் வேண்டும்
இலங்கையில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை உலமாக்களும் குர் ஆன் ஹதீதை அவற்றின் மூல மொழிமூலம் கற்றவர்களுமே பகிரங்கமாக பேச, எழுத முடியும் என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
அண்மைக்காலமாக இஸ்லாமிய மார்க்கம் என்பது பலரினதும் எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகி விட்டது. கண்ட கண்டவனெல்லாம் தான் கேள்விப்பட்டதை எல்லாம் இதுதான் இஸ்லாம் என பேச ஆரம்பித்து விட்டார்கள். முகநூல், வட்சப் போன்ற பொது தளங்களில் பத்வாக்கள் மலிவு விலை பொருட்களாகி விட்டன. இதனை இஸ்லாத்தின் மீது பற்று கொண்டோர் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
யார் இஸ்லாத்தை பற்றி பிழையாக எழுதினாலும் அதற்கு மறுப்பு தராமல் நமக்கேன் வம்பு என நகர்ந்து செல்வோரையும் நாம் காண்கிறோம். இவர்களுக்கு யாரும் பதில் அளித்தால் அந்த உலமாக்களை கடுமையாக விமர்சிப்பதையும், அவர்கள் பற்றி அபாண்டங்களை எழுதி அவர்களின் கருத்துக்களை பிழையாக காட்டும் முயற்சியும் நடை பெறுகிறது.
அது மட்டுமல்லாமல் புரைலர் கோழி போன்று அவசரமாக முப்திகளும் பிறந்து கொண்டிருப்பதை காண்கிறோம். இரண்டு மூன்று வருட முப்திகள் வெளியாகிறார்கள். இவர்கள் உண்மையில் முப்திகளா என்றும் அவர்களின் கல்வித்தகைமை பரிசோதிக்கப்பட்டதா என்பது பற்றியும் தேடுவதில் உலமா சபை அக்கறையற்றிருப்பது கவலை தருகிறது.
ஆகவே இஸ்லாத்தை யாரும் தாம் விரும்பியபடி பேச அனுமதிக்க முடியாது. எல்லா மனிதனாலும் இஸ்லாமிய சட்டங்களை பேச முடியும் என்றிருந்தால் இறைவன் நபிமார்களை அனுப்பியிருக்க தேவையில்லை.
இஸ்லாமிய சட்டங்களை பேசுபவர் குறைந்தது குர் ஆன், ஹதீதை அரபு மூலம் கற்றவராக இருக்க வேண்டும். அதனை கற்காதவர்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை தம் இஷ்டப்படி எழுதுவதை தவிர்க்க வேண்டும். இது விடயத்தில் ஜம்மிய்யதுல் உலமா சட்டம் இயற்ற வேண்டும். ஜம்மியதுல் உலமா என்பது பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட அமைப்பாகும். அதனால் ஜம்மியதுல் உலமாவின் அங்கத்தவர்கள், அல்லது குர் ஆன் ஹதீதை அதன் மூல மொழி மூலம் கற்று அதற்கான தராதர பத்திரம் உள்ளவர்கள்தவிர மற்ற பொது மக்கள் சமூக வலைத்தளங்கள், பொது தளங்களில் பேசுவது, எழுதுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் இதற்காக பொலிசாரால் சமயத்தை அவமானப்படுத்தல் குற்றமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதற்கான நடவடிக்கை எடுக்க உலமா சபை முயல வேண்டும் அல்லது அரசாங்கமாவது இதில் தலையிட வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
- முபாறக் அப்துல் மஜீத்
Post a Comment