அப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி
லேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
4 பிள்ளைகளுக்கு தந்தையான பாஹிம், மைத்திரிபால சிறிசேனாவின் பெயர் வரவேண்டிய இடத்தில், மகிந்த ராஜபக்ஸ என எழுதியமைக்காகவே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உண்மையில் பாஹிம் இந்தத் தவறை, திட்டமிட்டு செய்யவில்லை. அவ்வாறான நோக்கமும் அவருக்கு இருக்கவில்லை.
இந்நிலையில் குறித்த தவறுக்காக அவரை இடைநிறுத்தியமை ஏற்றுக்கொள்ள முடியாத, கண்டிக்கத்தக்க ஒரு செயற்பாடாகும்.
சகோதரர் பாஹிமை மீண்டும் லேக்ஹவுஸில் இணைப்பதற்கான முயற்சியை, முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. முஸ்லிம் பிரமுகர் ஒருவர் மூலமாக ஜனாதிபதியிடம் இதுபற்றி நேரடிய பேச முயற்சிக்கப்படுவதுடன், முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் என்.எம். அமீனும் இதன் முயற்சிகளில் இறங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை சுடர்ரொளி ஆசிரியர் அவரது பேஸ்புக்கில், இதுகுறித்து எழுதியுள்ள மற்றுமொரு குறிப்பையும் இங்கு தருகிறோம்...!
Sivarajah Ramasamy
மைத்ரி ஐயாவுக்கு ஒரு முக்கிய மடல் !
ஜனாதிபதி ஐயாவுக்கு எழுதப்படும் இந்த பதிவை, அவரின் அலுவலர்கள் அவரின் கவனத்திற்கு கொண்டுவருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்...
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ் வெளியீடான தினகரனில் உங்களது நேபாள விஜயம் தொடர்பான செய்திப்படமொன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் சார்க் செயலாளர் நாயகத்தை நீங்கள் சந்தித்த படக்குறிப்பில் உங்களது பெயருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பெயர் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது...
பல ஒப்பு நோக்காளர்கள் பார்த்தும் அச்சுப் பேய் கண்களுக்கு புலப்படவில்லை. அன்றையதினம் தினகரன் இரவு நேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்தவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் . முன்னாள் பிரபல இலக்கியவாதி சமூக ஆர்வலர் ஷம்ஸ் அவர்களின் மகன்...
ஷம்ஸ் அவர்களை பற்றி இந்த இணைப்பில் அறியலாம்.. https://ta.m.wikipedia.org/wiki/ மு._ஹா._மு._ஷம்ஸ்
இந்த விவகாரம் குறித்து ஒரு சக ஊடகவியலாளராக நான் எழுதுவதில் தப்பில்லை என நினைக்கிறேன்.. அதற்கு அப்பால் பாஹிமுக்கும் எனக்கும் இடையிலான நட்பு ஒன்றரை தசாப்தங்கள் கடந்தது. அதனால் இடுக்கண் களைய விரும்புகிறேன்..
ஜனாதிபதியின் பெயர் தவறுதலாக இடம்பெற்றமை தவறுதான்... அதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்..ஆனால் இந்த இடத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக அந்த பதிவு இடப்பட்டிருக்கவில்லை என்பதை சிறு குழந்தையும் அறியும். ஆனால் அந்த தவறுக்கு அவர் நடத்தப்படும் விதம் மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறதென்பதை பதிவிட விரும்புகிறேன்...
இப்படியான எழுத்துப் பிழைகள் அச்சு ஊடகங்களில் ஏராளமாக தாராளமாக கடந்த காலங்களில் சென்றுள்ளன. ஒருசமயம் வீரகேசரியில் “ ஜே ஆர் சனியன்று இந்தியா விஜயம்” என்ற தலைப்பில் இடப்பட்ட “று” எழுத்து மிஸ் ஆகியதால் ஒரு பிரச்சினை நடந்தது. ஆனால் அது யாரும் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதால் அடங்கிப் போனது.
அண்மைக்காலங்களில் பொது நிகழ்வுகளில் கூட உங்களது பெயருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பெயரை சில அதிகாரிகள் உச்சரித்திருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கைகள் பாயவில்லை. ஏனெனில் அவை அறியாமல் செய்யப்பட்ட தவறுகள் என்பதால் தான்.
ஏன் உங்களது கட்சி செயலாளர் கூட பதவியேற்ற கையோடு உங்களை அருகில் வைத்துக் கொண்டு மஹிந்தவின் பெயரை உச்சரித்தார். அரசியலில் பக்குவப்பட்ட நீங்கள் அதை கண்டு கொள்ளவேயில்லை. அதன் இணைப்பையும் இங்கே தருகிறேன்..
ஆனால் நல்லாட்சி என்ற பெயரில் நீதியான நிர்வாகம் நடக்கும் என்று கூறப்பட்ட உங்களது ஆட்சியின் லேக்ஹவுஸ் நிர்வாகம் கேட்டுக் கேள்வியின்றி பாஹிமை வேலையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.
உங்களை திருப்திப்படுத்துவதாக நினைத்து உங்கள் அலுவலக அதிகாரிகள் சிலரும் இதில் பின்னணியில் இருப்பதாக அறிகிறேன். இந்தளவு நாட்கள் கடந்து அதுவும் அறியாமல் செய்யப்பட்ட தவறுகளுக்கு இப்படியா தண்டனை வழங்கப்படவேண்டும் என நான் கேட்கிறேன்.
பிழைகளுக்கு இப்படித்தான் கேட்டுக் கேள்வியின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால் உங்களது ஊடக இணையப்பிரிவு இப்போதைக்கு கலைக்கப்பட்டிருக்க வேண்டும்.. நாட்டின் முதற்பிரஜையான உங்களின் இணைய ட்வீட்டர் பதிவுகள் அப்படி எழுத்துப்பிழைகளுடன் வந்து கொண்டிருக்கின்றன.. தமிழ் மொழி கொலை செய்யப்படுகிறது.
அதெப்படி ...இதல்லவா பாரிய குற்றம் என்றால் உங்கள் செயலாளர் மஹிந்தவின் பெயரை உச்சரித்தமையும் குற்றம் தான்.. தமிழ் மொழி இப்படி தப்புத் தப்பாக வெளிவருவதும் குற்றம் தான்... போதிய தமிழ் அறிவு இல்லாத சில அதிகாரிகள் உங்கள் இடத்தில் இப்படியான தவறுகளை வைத்துக்கொண்டு வேறு இடங்களில் தவறுகளை பிடிக்க முயன்று அதில் ஒரு நல்ல பெயர் எடுக்கலாமென நினைப்பதை நினைக்க நகைப்பே வருகிறது...
நிச்சயம் இந்த தவறு உங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தால் அதனை நீங்கள் பெருந்தன்மையுடன் விட்டிருப்பீர்கள் . பத்திரிகையில் மன்னிப்புக் கேட்டு அல்லது ஒரு சிறிய தண்டனையுடன் இது முடிந்திருக்கும். ஆனால் இது உங்களுக்கு தெரியாமல் நடக்கும் ஒரு விடயமென்றே என் உள்மனது சொல்கிறது...
எப்படியோ பாதிக்கப்பட்டுள்ள பாஹிமுக்கு ஒரு நீதியை வழங்குங்கள்.. அதேபோல் உங்கள் அலுவலகத்தில் விடப்படும் தமிழ்ப்பிழைகளை சரிசெய்ய உத்தரவிடுங்கள்...
உங்களின் கவனத்திற்காக உங்கள் அலுவலக - அதுவும் உங்களின் நிகழ்வுகள் தொடர்பான தமிழ்ப் பிழைகள் கொண்ட ட்வீட்டர் பதிவுகளை இங்கு தருகிறேன்...
நன்றி
வணக்கம்...
சுடர் ஒளி ஆசிரியர் சிவராசா ராமசாமி அவர்கள் ‘ உடுக்கை இழந்தவன் கைபோலே, இடுக்கண் களைவதாம் நட்பு’ எனும் பழமொழிக்கேற்ப மிகச்சிறந்த செய்தியை உரிய நேரத்தில் பதிவிட்டிருக்கின்றீர்கள் ஐயா! உங்கள் சேவை மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னப்பா மைத்திரி இன் பெயர் எல்லோருக்கும் மறக்குது மைத்திரி என்பதால் வேளை போனதோடு முடிந்தது மஹிந்த காலம் என்றால் கையே போய் இருக்கும்
ReplyDeleteஉங்கள் கருத்துக்களில் உயிரோட்டத்தை பார்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்