தொழுவதற்கு தடை, இந்தியாவில் அக்கிரமம்
ஹரியாணாவிலுள்ள ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்கள் தங்களது மத சடங்குகளை செய்வதற்கு கிராம பஞ்சாயத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் முஸ்லீம் சமுதாயத்துக்கு தலைமை வகிக்கும் ராஜ்பிர் கோக்கர் பிபிசியிடம் பேசும்போது, "எங்களது கிராமத்தை சேர்ந்த முஸ்லீம்கள் தொழுகையை கிராமத்திற்கு வெளியே சென்று செய்யவேண்டும் அல்லது அருகிலுள்ள ரோஹ்டக் நகர பகுதிக்கு சென்று செய்யவேண்டுமென்று கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளதுடன், குற்றஞ்சாட்டப்பட்ட யாமீன் என்பவர் வாழ்நாள் முழுவதும் கிராமத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
கிராமத்திலுள்ள முஸ்லீம்கள் அமைதியான சூழலில் வாழ வேண்டுமென்று விரும்பியதால், கிராம பஞ்சாயத்தின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மற்ற மதத்தை சேர்ந்த இளைஞர்களின் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ராஜ்பிர் கூறினார்.
"இதுபோன்ற கட்டுப்பாடுகள் உதவுமா, இல்லையா என்பது காலம்தான் கூறும். ஆனால், அமைதியை நிலைநாட்டவேண்டும் என்ற காரணத்தினால் இப்போதைக்கு இதை எதிர்க்க விரும்பவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், இதுபோன்ற கட்டுப்பாடுகள் குறித்து கிராம பஞ்சாயத்து எவ்வித எழுத்துபூர்வமான உத்தரவையும் வெளியிடுவதில்லை என்றும், வாய்மொழியாக கூறப்படும் இவை கிராம காவலாளியால் அறிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த இந்து சமூகத்தை சேர்ந்த சுரேஷ் குமார், முஸ்லீம்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். "முஸ்லீம்கள் தொழுகை செய்வதையோ, தாடி வளர்ப்பதையோ அல்லது தொப்பி அணிவதையோ கிராம பஞ்சாயத்து தடைசெய்யவில்லை. இடுகாட்டை கிராமத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவது என்ற ஒரேயொரு முடிவு மட்டுமே பஞ்சாயத்தில் எடுக்கப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.
முஸ்லீம்கள் குற்றஞ்சாட்டும் வகையிலான கட்டுப்பாடுகள் ஏதாவது அந்த கிராமத்தில் விதிக்கப்பட்டுள்ளதா என்று அருகிலுள்ள டிட்டோலி காவல்நிலையத்தின் துணை காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது, அவர் தனக்கு தெரிந்து இதுபோன்ற எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று கூறினார்.
கிராமத்தின் ஒரு பகுதியிலுள்ள இடுகாட்டை குடியிருப்பு பகுதிக்கு மாற்றியதை அடுத்து மக்கள் சிலர் செவ்வாய்க்கிழமையன்று திரண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதே கிராமத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி கன்றுக்குட்டி ஒன்று இறந்ததற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து யாமீன், ஷாகீன் ஆகிய இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். மேலும், கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்த கன்றுக்குட்டியை இரண்டு முஸ்லீம் இளைஞர்களும் வேண்டுமென்றே கொன்றதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஆனால், அந்த கன்றுக்குட்டியை தாங்கள் கொல்லவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
அச்சமயத்தில் நிலவிய பதற்றம் நிறைந்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கு அதிகளவிலான காவல்துறையினர் கிராமம் முழுவதும் குவிக்கப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்களில் ஒருவரது மனைவி, குழந்தைகள், சகோதரர் ஆகியோர் இதுவரை கிராமத்திற்கு திரும்பவில்லை. மற்றொவரது வீடு இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.
Post a Comment