நான் குற்றமற்றவன் என, நம்பியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் - கமீர் நிசாம்தீன்.
பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை வாழ் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
அத தெரண செய்திப் பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் எமக்கு தன்னுடைய விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கையில்,
"ஹாய், நான் கமீர் நிசாம்தீன். உங்கள் எல்லோருக்கும் தெரியும் எனக்கு பிணை வழங்கப்பட்டது. நான் இப்போது சுதந்திர மனிதன். ஒரு குறிப்பிட்ட சிலருக்கு எனது நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஸ்கந்தகுமார் மற்றும் லால் விக்ரமதுங்க, பிரமுதிதா ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருந்து உதவியமைக்காக அவர்களுக்கு மிகவும் நன்றிகள்.
மேலும், இலங்கை வாழ் பொதுமக்கள் மற்றும் உயரதிகாரிகள் நான் குற்றமற்றவர் என நம்பியமைக்காகவும் நான் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். பெளத்த, கிறிஸ்தவ, இந்து மத குருமார்கள் மற்றும் இலங்கை ஊடகங்களுக்கும் எனது நன்றிகள்.
குறிப்பாக உண்மையான மற்றும் சரியான செய்திகளை வெளியிட்ட இலங்கை ஊடகங்களுக்கும், அத தெரண செய்தி சேவைக்கும் ஒரு மிகப் பெரிய நன்றிகள்.
கமீர் நிசாம்தீன் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றம் சாட்டியிருந்தனர்.
Post a Comment