“எனது இரத்தத்தின் இறுதிச் சொட்டுவரை, என்னை அவதூறு செய்யும் உரிமைக்காக போராடுவேன்” - ரணில்
ஊடக சுதந்திரம் என்ற கொள்கைக்காகத் தாங்கள் செயற்படுவதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் ஊடகங்களால் அதிக அவதூறுக்கு உள்ளாக்கப்படும் நபராக, தானே உள்ளதாகவும், அதுவே இதற்கான ஆதாரமெனவும் குறிப்பிட்டார். “எனது இரத்தத்தின் இறுதிச் சொட்டு வரை, என்னை அவதூறு செய்யும் உரிமைக்காக நான் போராடுவேன்” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஊடக சுதந்திரம், சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான கொழும்புப் பிரகடனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் முதலாவது நாளில், பிரதம விருந்தினராக நேற்று (27) கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகங்கள், உண்மையைச் சொல்வதிலிருந்து தவறுகின்றன என்ற குற்றச்சாட்டையும், பிரதமர் இதன்போது முன்வைத்தார்.
லசந்த விக்கிரமதுங்க, பிரதீப் எக்னெலிகொட ஆகியோர், ஊடக சுதந்திரத்துக்காகத் தியாகம் செய்துள்ளனர் என்பதை ஞாபகப்படுத்திய பிரதமர், அவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடக்கிறது எனத் தன்னிடம் கேள்வியெழுப்பப்பட்டதாகவும், அது தொடர்பில் தான் விசாரித்த போது, “ஊடகங்கள் எங்களைப் பயன்படுத்தி, எங்களைச் சாட்சிகளாக்க முயலும் போது, நாங்கள் எப்படி விசாரணை செய்வது?” என, பொலிஸ் அதிகாரியொருவர் தனக்குப் பதிலளித்தார் எனவும், பிரதமர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் எதிர்காலம்
ஜனநாயத்தை உறுதிப்படுத்தவே தமது அரசாங்கம் எண்ணியது எனத் தெரிவித்த அவர், அந்த வகையில் ஊடகங்கள் சுயாதீனமாகச் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கமைய, சிவில் சமூகமும் நாடாளுமன்றமும் இணைந்து, சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை ஸ்தாபிக்க முடிந்தது என்றும், இதற்கமைய, நீதிச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு , சுகாதார சேவைகள் ஆணைக்குழு என பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன எனவும் ஞாபகப்படுத்திய அவர், இவற்றின் ஊடாக மக்களுக்கு, அரசாங்கத்தால் சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றன என்றார்.
மக்கள் போராடியே, ஊடக சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டனர் என்று தெரிவித்த அவர், அதனை இல்லாமல் செய்ய, அவர்களாலேயே முடியும் எனவும் குறிப்பிட்டார்.
Post a Comment