கவனிப்பாரற்று கிடக்கும், அஷ்ரப் இல்லம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தனது இறுதிக் காலத்தை அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் கழிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கிய லீடர் அஷ்ரஃப் இல்லம், அவர் மரணித்து பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை எவராலும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டு வருகின்றது.
இந்த இல்லத்தினை புனரமைத்து மறைந்த தலைவர் அஷ்ரஃபின் கனவினை நனவாக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பிராந்திய மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒலுவில் பிரதேச எதிர்கால சந்ததியினரின் உயர்கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டும், அம்மக்களின் வாழ்வாதாரததை உறுதிப்படுத்தும் நோக்கினையும் அடிப்படையாகக் கொண்டும் அப்பிரதேசத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் ஒலுவில் துறைமுகம் ஆகியன மர்ஹூம் அஷ்ரஃபினால் அமைக்கப்பட்டன.
இவ்விரு பாரிய நிறுவனங்களையும் அமைத்த மர்ஹூம் அஷ்ரஃப் தனது இறுதிக்காலத்தை ஒலுவில் பிரதேசத்தில் கழிக்க வேண்டுமென்ற இலக்குடன் லீடர் ஹவுஸ் என்ற பெயரில் நவீன முறையில் தனக்கானதும் வட கிழக்கு மாகாண மக்களின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அரசியல் பணிமனையாகவும் இவ்வில்லத்தினை அவர் நிர்மாணித்தார். இந்த இல்லத்தின் நிர்மாணப்பணி சுமார் 95 சதவீதத்தினை எட்டியிருந்த வேளையில் அவர் இயற்கை எய்தினார்.
இவ்வீட்டுக்கான பின்னுரித்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கென செயற்படுத்தியிருந்த லோட்டஸ் நம்பிக்கை நிதியத்தின் பெயரில் எழுதிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்ட பீடமொன்றை உருவாக்கி தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் காலகட்டத்தில் ஒலுவில் பிரதேசத்திலுள்ள இவ்வீட்டில் இருந்து கொண்டு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை வருகைதரு விரிவுரையாளராக இருந்து எதிர்கால சந்ததியினருக்கு சட்டத்துறைசார் கல்வியினை போதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினை மர்ஹூம் அஷ்ரஃப் கொண்டிருந்தார்.
பல்வேறு உயரிய நோக்கத்தினை இலக்காகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இவ்வில்லம் தற்போது கவனிப்பாரற்று சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறும் தளமாகவும், விஷ ஜந்துக்களின் அமைவிடமாகவும், கால்நடைகளின் உறைவிடமாகவும் காட்சி தருகின்றது.
இவ்வில்லத்தினை மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் நினைவில்லமாகக் கொண்டு பொது நிறுவனங்களுக்காகவும், கல்விக்கூட செயற்பாடுகளுக்காகவும் மாற்றியமைத்து செயற்படுத்தும்படி இப்பிரதேச மக்கள் பல்வேறு தடவைகள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் இதுவரை இவ்விடயத்தில் எவ்வித முன்னேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் எந்த நோக்கத்தின் அடிப்படையில் இவ்வில்லத்தினை அமைத்தாரோ அந்நோக்கத்தினை இலக்காகக் கொண்டு அன்னாரின் நினைவில்லமாக இந்த லீடர் ஹவுஸினை புனரமைத்து அன்னாரின் கனவினை நனவாக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பிராந்திய மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், ஸ்தாபகச் செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூரிடம் வினவினோம். "மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பல்வேறு கனவுகளின் அடிப்படையில் ஒலுவில் பிரதேசத்தில் லீடர் ஹவுஸ் என்னும் இவ்வில்லம் நிர்மாணிக்கப்பட்டது.
தலைவரின் இறுதிக் காலகட்டத்தினை ஒலுவில் பிரதேசத்தில் கழிக்க வேண்டுமென்ற நோக்குடனும், இப்பிராந்திய மக்களின் பிரச்சினைகளையும் குறைபாடுகளையும், பிரதேசத்தில் மக்களோடு மக்களாக இருந்து அறிந்து மக்களின் எதிர்கால நன்மைக்காக செயற்படுவடுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட இவ்வில்லத்தினை மிக விரைவில் புனருத்தாபனம் செய்து அன்னாரின் நினைவில்லமாகவும் அதனை ஓர் கலைக் கூடமாகவும் மாற்றியமைப்பதற்காக தற்போதைய கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இதனை மக்கள் பணிமனையாகவும் அரசியல் கேந்திர நிலையமாகவும் மாற்றியமைக்க மிக தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்" என்றார்.
எம்.ஏ.றமீஸ்
கட்டுரையின் கடைசிப் பகுதியை வாசிக்க வாசிக்க சிரிப்போ சிரிப்பா வருவுது. இப்பிடி அடிக்கடி நகைச்சுவையா எழுதினா இன்னும் வேடிக்கையாக இருக்கும பாருங்கோ.
ReplyDelete