Header Ads



செத்த வீட்டில் கைமாறிய, தேநீர்க் கோப்பை - வயிறு குலுங்க சிரித்த மங்கள

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரின் மரண வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும் சென்றிருந்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீர நீண்ட நேரம் மெதமுலன வீட்டில் தரித்திருந்து முன்னாள் ஜனாதிபதியுடன் அந்நியோன்யமாக உரையாற்றிக் கொண்டிருந்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜபக்‌ஷ குடும்பத்தை கடுமையாக விமர்சித்து வரும் மங்கள சமரவீர இங்கு சென்று நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தது பற்றி பல்வேறு மட்டங்களில் பேசப்படுகிறது. அமைச்சர் மங்கள எதிரணிக்கு செல்லப் போவதாக வேறு கதையடிபட்டது. ஆனால் அதன் நம்பகத்தன்மை தொடர்பில் எந்த உறுதியும் இல்லை என்பது வேறு விடயம்.

இலங்கையில் ஆட்சிமாற்றங்களுடன் அப்பத்திற்கும் கோப்பி பானத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பது அறிந்ததே. ஆனால் முன்னாள் ஜனாதிபதியின் மரணவீட்டில் இடம்பெற்ற தேநீர்க் கோப்பை விவகாரமும் இன்று அரசியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது.இது பற்றி அமைச்சர் மங்கள சமரவீர,முன்னாள் ஜனாதிபதியிடம் வினவினாராம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மரணவீட்டிற்கு வந்த போது நடந்த தேநீர்க் கோப்பை விவகாரம் ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு நெருக்கமானவர்களிடையே பிரபலமாகியிருந்தது.

ஜனாதிபதி எங்கு சென்றாலும் அவரின் சாப்பாட்டு விடயங்களை கவனிக்க சிலர் கூடவே செல்வார்கள். மரணவீட்டிற்கும் அவ்வாறு சிலர் சென்றிருந்தார்களாம். அவர்கள் கூடவே ஜனாதிபதிக்குத் தேவையான உணவு வகைகளை எடுத்துச் செல்வது வழமை.முன்பிருந்த ஜனாதிபதிகளும் இந்த வழமையை பின்பற்றினார்கள்.

மரண வீட்டிற்கு வந்த ஜனாதிபதி அங்கிருந்தவர்களுடன் சுமூகமாக பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு தேநீர் தயாரிக்கப்பட்டதோடு அதனை ஜனாதிபதியிடம் வழங்குமாறு வீட்டிலுள்ள நபர் ஒருவரிடம் கூறப்பட்டதாம். அவரும் தேநீரை எடுத்துக் கொண்டு வாசல் பக்கம் வந்திருக்கிறார். ஜனாதிபதியுடன் மஹிந்த ராஜபக்‌ஷவும் சமல் ராஜபக்‌ஷவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தேநீர் பரிமாற வந்தவருக்கு நாட்டின் ஜனாதிபதியை தெரிந்திருக்காதா? ஆனால் வீட்டில் மஹிந்த ராஜபக்‌ஷவை தான் ஜனாதிபதி என்று கூறுவதுண்டு.இந்த நிலையில் அவர் தேநீரை முன்னாள் ஜனாதிபதியிடம் கொடுத்திருக்கிறார். தேநீர் கோப்பையை பார்த்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஏதோ குழப்பம் நடந்திருப்பது விளங்கிவிட்டது. ஏ​னென்றால் அவர் வழமையாக தேநீர் அருந்தும் கோப்பை வேறு. இதனால் தனக்கு வழங்கிய தேநீரை அவர் ஓரமாக வைத்துவிட்டு ஜனாதிபதியுடன் கதைப்பதில் ஈடுபட்டாராம். அதன் பின்னர் ஜனாதிபதிக்கு வேறு தேநீர் வழங்கப்பட்டதாக தகவல்.இந்தக் கதையை தான் அமைச்சர் மங்கள சமரவீர விசாரித்திருந்தார். நடந்த சம்பவத்தை கேட்டு அவர் வயிறு குலுங்க சிரித்ததாக தகவல்.

 இப்னு ஷம்ஸ்

No comments

Powered by Blogger.