ஜித்தாவிலிருந்து ரயிலில், மதீனா சென்ற சல்மான்
மத்திய கிழக்கில் மிகப்பெரும் மின்சார கடுகதி ரயில்வே திட்டமான ஹரமைன் அதிவேக ரயில் சேவை கடந்த செவ்வாய்க்கிழமை ஜித்தாவிலுள்ள அல்-சுலைமானியா ரயில் நிலையத்தில் மன்னர் சல்மானினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் மன்னரின் ஆலோசகரும் மக்கா ஆளுநருமான இளவரசர் காலித் அல்- - பைஸல் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மன்னர் மதீனாவுக்குப் பயணித்ததுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. ரயிலின் சாரதியாக சவூதி நாட்டவரான அப்துல்லாஹ் அல்- -அஹ்மதி கடமையாற்றினார்.
நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் கலாநிதி நாபில் அல்- - அமௌதி, 'சவூதி அரேபியா, யாத்திரிகர்களுக்கு சேவையாற்றுவதில் எப்போதும் பெருமையடைகின்றது. இரு புனிதத் தலங்களும் முன்னொருபோதும் இல்லாதவாறு நெருக்கமாகியுள்ளன' எனத் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் போக்குவரத்துத்துறையில் விரிவான இத்திட்டத்திற்கு மன்னர் சல்மான் மற்றும் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் நெறிப்படுத்தலை வழங்கியதாகவும், அனைத்துத் தடைகளையும் கடப்பதற்கு தலைமைத்துவம் வழங்கிய ஆதரவின் காரணமாக இரு புனிதத் தலங்களான மக்காவுக்கும் மதீனாவுக்கும் விஜயம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிகளவான யாத்திரிகர்களை வரவழைக்கும் 2030 இலக்கை நோக்கிய திட்டத்தின் ஒரு பகுதியே ஹரமைன் அதிவேக ரயில்வே திட்டமாகும். தேசிய அபிவிருத்திக்கும் பொருளாதார மறுமலர்ச்சிக்கும் பிரதான தூணாக போக்குவரத்து காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
1951 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் முதலாவது ரயில்வே திட்டத்தினை (கிழக்கு புகையிரதம்) மன்னர் அப்துல் அஸீஸ் மற்றும் மன்னர் சவூத் ஆகியோர் ஆரம்பித்து வைக்கும் புகைப்படமொன்றை அல்- - அமௌதி மன்னரிடம் கையளித்தார்.
Post a Comment