இலங்கையில் கிரிக்கெட்டை அழித்தது, ரணதுங்க குடும்பமே - தயாசிறி
இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை அழித்தது தான் அல்லவென்றும் ரணதுங்க குடும்பமே என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறினார்.
அவர் இதனை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே குறிப்பிட்டார்.
தான் ஒரு போதும் சூதாட்டக்கார்களுடன் இணைந்து கொடுக்கல் வாங்கல்களை எடுக்கவில்லையென்றும் ஆனால் தன் மீது குற்றம் சுமத்துபவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் சூதாட்டக்காரர்களுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாராளுமன்றத்தில் கூட குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என ஜயசேகர கூறினார்.
“நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த வேளையில் விளையாட்டை சரியான வழியில் கொண்டு செல்ல பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளேன். நான் செய்தவற்றை சொல்லவிரும்பவில்லை. என்னிடமும் குறைகள் இருக்கலாம்.
அனைவரும் 100% நல்லவர்கள் அல்ல. ஆனால் தொடர்ந்து என் மீது அர்ஜுன ரணதுங்க குற்றஞ்சாட்டுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் அவற்றை கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் தவறு செய்யாமல் அவற்றை என்னால் கேட்க முடியாது.
நான் சூதாட்டக்காரர்களோடு இல்லை. எனக்கு சுமதிபாலவை சில காலம் தெரியும். ஆனால் அர்ஜுன ரணதுங்கதான் அவரின் வீட்டுக்குச் சென்று விருந்துண்டவர். இன்று அவருக்கு திலங்க சுமதிபால சூதாட்டக்காரராகத் தெரிகின்றார்.
அர்ஜுன ரணதுங்க தலைவராக இருந்தபோது கிரிக்கெட் நிர்வாக சபைத் தேர்தலில் திலங்க சுமதிபாலவுக்கு உதவி செய்தது ரணதுங்க குடும்பமேயாகும். 1998ம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவராக திலங்க சுமதிபால இருந்தபோது, பிரதான நிறைவேற்று அதிகாரி தம்மிக்க ரணதுங்க, உப தலைவர் பிரசன்ன ரணதுங்க, நிறைவேற்று உறுப்பினர் நிஷாந்த ரணதுங்க, இவர்கள் ஏற்கனவே இருந்தவர்கள்.
அர்ஜுன ரணதுங்க திலங்கவுடன் தனது சகோதரர் தம்மிக்க ரணதுங்கவை கிரி்க்கெட் நிர்வாக சபையிலிருந்து நீக்கியதற்காகவே கோபித்துக் கொண்டார்.
அதற்குக் காரணம் தனது தாயாருக்குக் கிடைத்த வரிவிலக்குடனான வோல்வோ வாகனமொன்றை கிரிக்கெட் நிர்வாக சபைக்கு தம்மிக்கவால் விற்கப்பட்டதே காரணமாகும். அதேபோல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை தொடர்பாகவும் பிரச்சினை இருந்தது. தற்போது எமக்கு சூதாட்ட குற்றச்சாட்டை சுமத்துபவர்கள் அன்று திலங்கவுடன் வேலை செய்யும் போது எதுவும் கூறவில்லை எனவும் கூறினார்.
Post a Comment