மைத்திரிபால + கோத்தபாய கொலை சதித்திட்டத்துக்கு, அரசியல் பின்னணியே காரணமாகும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதித்திட்டத்துக்கு அரசியல் பின்னணியே காரணமாகும். அத்துடன் முறையான விசாரணை இடம்பெறுமா என்ற சந்தேகமும் இருக்கின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஜனாதிபதிக்கும் கோத்தபாய ராஜபக்ஷ்வுக்குமிடையில் எவ்வாறான தொடர்புகள் இருக்கின்றன என்பது யாரும் அறிந்த விடயம். அத்துடன் தற்போது இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் கருத்து வேறுபாடுகள் போன்றவற்றை தீர்ப்பதற்கு சிலவேளை, ஜனாதிபதிக்கு கோத்தபாய ராஜபக்ஷ ஆலோசனைகளை தெரிவிப்பவராகவும் இருக்கலாம்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவே தெரிவாவார் என்று இந்தியா நம்புகின்றது. அதேபோன்று சர்வதேச பொருளாதார சஞ்சிகை ஒன்றும் இதனை எதிர்வு கூறியுள்ளது. அதனால்தான் இந்தியா மஹிந்த ராஜபக்ஷ்வை அழைத்து அவருக்கு அரச தலைவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை வழங்கியிருந்தது. அத்துடன் பல சர்வதேச நாடுகள் மஹிந்த ராஜபக்ஷ்வை உத்தியோகபூர்வமற்ற அரச தலைவராக இப்போதே ஏற்றுக்கொண்டுள்ளன.
அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ் ஆகியோரை கொலைசெய்யும் சூழ்ச்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த சதித்திட்டத்துக்கு அரசியல் பின்னணியே காரணமாகும். முறையான விசாரணை இடம்பெற்றால் அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கலாம்.
(எம். ஆர்.எம்.வஸீம்)
Post a Comment