வீரவன்சவின் தலைக்கு ஊசியேற்ற வேண்டும், அப்போதே அவரது மூளை வேலை செய்யும்.
விஷ ஊசி ஏற்றப்பட்ட பால் பக்கட்டுகளை நான் கூட்டு எதிரணியின் பேரணியின்போது விநியோகித்தேன் என்பது அடிப்படையற்றவை. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பேரணிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்றே ஐ.தே.கட்சி தீர்மானித்திருந்தது.
எனக்கெதிராகப் பொய் குற்றச்சாட்டு சுமத்தி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச மற்றும் செஹான் சேனசிங்க ஆகியோருக்கு தண்டனைச் சட்டக்கோவை 208 ஆம் ஷரத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நேற்று சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் தெரிவித்ததாவது;
பேரணிக்குப் பிரச்சினை ஏற்படுத்த வேண்டுமென்றால் நாம் பால் பக்கட்டுகள் மூலம் செய்யத் தேவையில்லை. வேறு வகைகளில் தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்களது குற்றச்சாட்டுகளில் உள்ள முரண்பாடுகள், இக்குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிரூபிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் விஷ ஊசியேற்றிய பால் பக்கட்டுகள் என்னால் மாளிகாவத்தையில் விநியோகிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் பொலிஸில் ஒருவர் செய்த முறைப்பாட்டில் கொம்பனித் தெருவில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இருவேறான முறைப்பாடுகள் இவை.
பால் பக்கட் அருந்தி நோயுற்ற ஒருவர் வைத்தியசாலைக்கு இரவு 8 மணிக்கே சென்றுள்ளார். 39 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். 3 மணிக்கு பால் பக்கட் விநியோகித்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்கள். ஆனால் இரவு 8 மணிவரை அவர்கள் பால் பக்கட்டை கையில் வைத்திருந்துள்ளார்கள். பாலை குடித்துவிட்டு பக்கட்டை வீசியிருக்கவில்லை. இதிலிருந்து குற்றச்சாட்டு அடிப்படையற்றவையாகும்.
தவறான செய்திகளைப் பரப்பும் விமல் வீரவன்சவின் தலைக்கே ஊசியேற்ற வேண்டும். அப்போதே அவரது மூளை வேலை செய்யும்.
எவரது வீட்டில் காலாவதியான வயாகரா கொடுத்து இளைஞர் இறந்தார் என்பதை அனைவரும் அறிவார்கள். அப்படியானவர்கள் நாம் பால் பக்கட் வழங்கியதாகக் கூறுகிறார்கள்.
பேரணி குறித்து நாமும் பயமுற்றிருந்தோம். ஆனால் அனைத்தும் புஸ்வானமாகிவிட்டது. அரபு வசந்தம் என்றார்கள். ஆனால் பேரணி அரபு வசந்தமல்ல. அரக்கு (சாராயம்) வசந்தமாகும்.
நான் பல வைத்தியர்களிடம் பால் பக்கட் விவகாரம் தொடர்பில் வினவினேன். பால் பக்கட்டுகளுக்கு விஷ ஊசி ஏற்றுவது பற்றி முதன் முதல் இப்போதே அவர்கள் கேள்விப்பட்டதாகக் கூறினார்கள் என்றார்.
Post a Comment