Header Ads



கண்டிய நடனத்தை தெருவிலே ஆடட்டும், பரதநாட்டியத்தை தெருவில் ஆட முடியாது

எதிர்வரும் காலங்களில் பரதநாட்டியத்தை தெருவில் ஆட முடியாதவாறான சுற்று நிருபத்தை வட மாகாண கல்வி அமைச்சு விரைவில் வெளியிடவுள்ளதாக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடத்தும் ' தெய்வீக சுகானுபவம்' நிகழ்வு இன்று யாழ்பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுவருகின்றது. 

இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் விழாக்கள் இடம்பெறும் போது அதிதிகளை அழைத்து வருவதற்கு தெருவிலே பரதநாட்டியம் ஆடப்பட்டதை பல இடங்களிலே அவதானித்திருக்கின்றோம். விழாக்களிலே இராணுவத்தை வரவேற்பதற்கு கூட இந்த பரதநாட்டியம் தெருவிலே ஆடப்பட்டிருக்கிறது. 

கண்டிய நடனத்தை வேண்டுமென்றால் அவர்கள் தெருவிலே ஆடட்டும். ஆனால் பரதநாட்டியம் என்பது மேடையிலே மக்களுக்கு செய்தியை சொல்லக்குடிய வகையிலே ஆடப்படவேண்டும்.

மேலும் கலைகளை வளர்ப்பது தொடர்பில் நாங்கள் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் வருடாவருடம் நாங்கள் கொண்டுவருகின்ற இந்த தெய்வீக சுகானுபவம் ஒரு முக்கியமான விடயமாகும் என்றார். 

No comments

Powered by Blogger.