Header Ads



விரித்து, சுருட்டி வைத்துக்கொள்ளும் வகையிலான மொபைல் தயாரிப்பு

உருளை வடிவ சிறு குழாய் போன்ற வித்தியாசமான வடிவத்தில் இருக்கும் அலைபேசி, கண்ணிமைக்கும் நேரத்தில் 7.5 அங்குல திரையுள்ள டேப்லெட்டாக மாறினால் எப்படி இருக்கும்? இதுவரைக்கும் கனவாக, எதிர்கால தொழில்நுட்ப வருகையாக பார்க்கப்பட்ட இதுபோன்ற தொழில்நுட்ப கருவியை உருவாக்கியுள்ளனர் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள குயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

காலங்காலமாக மக்களின் தகவல் மூலமாக இருந்துவரும் செய்தித்தாளை படித்து முடித்துவிட்டு, சுருட்டி வைத்துக்கொண்டு நகர முடியும். ஆனால், ஏன் அதுபோன்ற தொழில்நுட்ப கருவியை உருவாக்க கூடாது என்று எழுந்த கேள்வியின் பதிலாகத்தான், மடித்து, சுருட்டி வைத்துக்கொள்ளக்கூடிய மேஜிக்ஸ்க்ரோல் என்னும் இந்த கருவியை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை விஞ்ஞானியான வெர்டேகால்.

7.5 அங்குல திரையும், 2K ரெசல்யூஷனும் கொண்ட இந்த உருளை வடிவ கருவியை மடித்து வைத்துக்கொண்டே அதன் இருமுனைகளிலுள்ள சக்கரம் போன்ற அமைப்பை திருகுவதன் மூலமும், திரையை தொடுவதன் மூலமும் வழக்கம்போல் போன் செய்யலாம், செயலிகளை பயன்படுத்தலாம்.

அதேசமயத்தில், பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு வேண்டும்போது, அந்த திரையை வெளியே இழுத்து, கையடக்க கணினி (டேப்லெட்) போன்று பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயற்பாட்டுக்கு தேவையான அனைத்து அமைப்புகளும் உருளையின் உட்புறத்தில் வைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சாம்சங், ஆப்பிள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மடித்து, விரிக்கும் வகையிலான அலைபேசி உருவாக்கும் முயற்சியில் பல்வேறு ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் அவர்களுக்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி இதுசார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்று கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.