விக்னேஸ்வரனின் கோரிக்கை, நீதிமன்றத்தால் இன்று நிராகரிப்பு - சட்டத்தரணிகள் வாதம் புரிந்தும் பயனில்லை
நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி. டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி. டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.
அதன்படி பி.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ´நீதிமன்றத்தை அவமதித்ததாக´ கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.டெனிஸ்வரன் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
இதுதவிர ´நீதிமன்றத்தை அவமதித்ததாக´ தனக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு பி. டெனிஸ்வரன் தாக்ல் செய்திள்ள அந்த வழக்கை இடைநிறுத்துமாறு கோரி விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பி. டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவே இன்றைய தினம் (18) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, உச்ச நீதிமன்றத்தில் எதிர்வரும் 28ம் திகதி இதனுடன் தொடர்புடைய வழக்கு விசாரணை இடம்பெற இருப்பதனால், அதன் தீர்ப்பு வரும் வரை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை ஒத்தி வைக்குமாறு சி.வி.விக்னேஸ்வரன் சார்பான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் விக்னேஸ்வரனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கை விசாரிப்பதாக உத்தரவிட்டது.
இதனையடுத்து நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று தெரிவித்து விக்னேஸ்வரன் சார்பு சட்டத்தரணிகள் அடிப்படை எதிர்ப்பு வௌியிட்டனர்.
எவ்வாறாயினும் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இரஞ தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், அடிப்படை எதிர்ப்பு தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் 16ம் திகதி வரை பிற்போட்டு உத்தரவிட்டது.
Post a Comment