அமைச்சரவையில் சூடான வாதப்பிரதிவாதங்கள்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகநடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
கூட்டாட்சி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போது சுமார் 80 அமைச்சரவைப் பத்திரங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் 6 பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.
அதேவேளை, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, சர்வதேச தரத்துக்கமைய கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் குறித்த யோசனையை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமைச்சரவையில் முன்வைத்தார்.
அந்த யோசனையிலிருந்த குறைபாடுகளை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த யோசனையின் பிரகாரம் மரணதண்டனை வழங்கமுடியாது. ஒரு பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டால்கூட, அது மீள உறுதிப்படுத்தப்படவேண்டும்.
நாட்டில் ஒரு சட்டம்தான் இருக்கவேண்டும். சந்தர்ப்பத்துக்கேற்ப அதில் நெகிழ்வுப் போக்கைக் கடைபிடிக்கமுடியாது” என்று சுட்டிக்காட்டினார்.
இதை ஏற்க மறுத்த முன்னாள் சட்டமா அதிபர் பதவியை வகித்த அமைச்சர் திலக் மாரப்பன, நடைமுறைச் சிக்கல்களை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
அவ்வேளையில் விஜயதாஸவுக்கு சார்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குரல் கொடுக்க இவ்விவகாரம் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இறுதியில் சட்டம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், நாடாளுமன்றத்தில் குழுநிலையின்போது தேவையான திருத்தங்களை முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டு, யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதேவேளை, எரிபொருள் விலையேற்றம் குறித்தும், இந்திய நிறுவனத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment