Header Ads



ஜனாதிபதி - பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளில், பெருமளவு நிதி செலவு என குற்றச்சாட்டு

அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய நிகழ்வுகள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு பெருமளவு நிதி செலவு செய்யப்படுவதாகவும் இது தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்வது அவசியமென்றும் பிமல் ரத்நாயக்க எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய கணக்காய்வாளர் நாயகம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடை யிலான நம்பிக்கையின்மை சிறப்பாக இல்லை. அதேபோன்று அரச அதிகாரிகள் மட்டத்தில் இது மேலும் அதிகரித்த மட்டத்தில் உள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு அரச அதிகாரிகளின் ஊழல், மோசடி தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட பொறிமுறையொன்று அவசியம். நாடு என்ற ரீதியில் சுமக்க முடியாத சுமைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் நான்கு முறை திறக்கப்பட்டது. இவற்றுக்கு ஏற்பாடு செய்த நிகழ்வுகளுக்கு பெருமளவில் நிதி செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மகள் ஒரு விளம்பர நிறுவனமொன்றை நடத்துவதாக தெரிய வருகிறது. அதேபோன்று பிரதமரின் உறவினர்கள் எவரும் விளம்பரக் கம்பனிகள் வைத்துள்ளனரா என்பது பற்றித் தேடிப் பார்க்க வேண்டும்.

அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகளை தாமதித்து ஆரம்பிப்பதையே தொடர்ச்சியாக காண முடிகின்றது. அந்த வகையில் தற்போது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடத்தில் மேற்கொண்டிருக்க வேண்டிய தேசிய கணக்காய்வு சட்ட மூலம் இந்தளவு தாமதமாகி அதன் சக்தி குறைக்கப்பட்டே கொண்டு வரப்படுகிறது. அதேபோன்று வரவு செலவு திட்ட செயலகமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் பிரதமரால் கூறப்பட்ட விடயம் இதுவரை இடம்பெறவில்லை. அது வெறும் வினோத பேச்சாகவே அமைந்துவிட்டது என்றும் பிமல் ரத்நாயக்க எம்.பி. மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. அது முற்றிலும் உண்மையான விடயம் தான் ஜனாதிபதியோ,பிரதமரோ பங்கேற்றும் நிகழ்வுகளில் கூடாரம் அமைக்கவும் மற்றும் அவர்கள் வந்து அமர்வதேட்கும் விசேட கதிரைகள் எடுத்து வந்து அமைக்கவும் வீணான செலவுகள் தான் உதாரமாக ஐரோப்பாவில் இப்படியெல்லாம் தேவையில்லாத செலவுகள் செய்யமாட்டார்கள் ஜனாதிபதியோ அவர்களின் அமைச்சர்களோ பொது இடங்களில் கூட்டம்கள் கூடுவதட்கு எந்தவிதமான வீண் செலவுகளை செய்யமாட்டார்கள்,ஜனாதிபதியும்,பிரதமரும் சும்மா சாதாரண கதிரையிலே மூன்றாம் நபர் போல அமர்ந்து தங்களுடைய கடமைகளை செய்து செல்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.