பௌத்த விகாரைக்காக முஸ்லிம்களின், காணியை சுவீகரிக்க முயற்சி - கிழக்கு ஆளுநருடன் மு.கா. சந்திப்பு
இறக்காமம் மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்காக முஸ்லிம்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகமவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் இன்று (8) சனிக்கிழமை ஆளுநரின் கொழும்பு அலுவலகத்தில் சந்தித்து தமது பலத்த எதிர்ப்பை தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இறக்காம பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மௌலவி யூ.கே. ஜபீர் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் கலந்துகொண்டனர்.
இறக்காமம் மாயக்கல்லி மலை பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்கு ஒரு ஏக்கர் நில ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரை கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக இறக்காம பிரதேச செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரையை தொடர்ந்தே கிழக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பை மேற்படி உயர் மட்டக் குழுவினர் மேற்கொண்டனர்.
மாயக்கல்லி மலைப் பிரதேசத்தின் முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு குறித்த விகாரை அமைக்கப்படுவதற்கான முயற்சிக்கு பலத்த எதிர்ப்பினை குறித்த உயர் மட்டக் குழுவினர் இதன்போது தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோருடன் தான் ஜனதிபதியைச் சந்தித்து இதற்கு தீர்வு காண்பதாக ஆளுநர் தெரிவித்தார். அத்தோடு ஜனாதிபதியை சந்தித்து தீர்வு பெறும்வரை அப்பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்கான நில ஒதுக்கீடு மேற்கொள்வதை தான் தடுத்து நிறுத்துவதாகவும் உறுதியளித்தார்.
மேலும் இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான கோரிக்கையினை நாம் பல முறை விடுத்திருந்தபோதிலும் குறித்த கல்வி வலயம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதை பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது சுட்டிக்காட்டி இது சம்பந்தமான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். குறித்த விடயம் தொடர்பான ஆவணங்களை கல்வி அமைச்சுக்கு தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் இது தொடர்பான எமது நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் குழு ஏற்கனவே பொத்துவில் கல்வி வலயம் அமைப்பது தொடர்பாக பிரதமருடன் பேசி அதற்கான உத்தரவாதத்தை பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தற்போது அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
(அகமட் எஸ். முகைடீன்)
திருகோணமலை மாவட்ட சேருவிலே தொகுதியில்
ReplyDeleteசெல்வநகர் - நாவேட்க்கேணி மக்களின் காணிகள் விகாரை அமைப்பதட்க்காக பறிக்கப்பட்டபோது மேல்குறிப்பிட்ட மு கா தலைவர் எங்க போனார் என்பது இன்னும் கேள்விக்குறியாய் இருக்கிறது
இப்போ அழகான விகாரை சிறப்பாக ஜொலிக்கிறது முஸ்லிம்களின் காணிகளுக்குள்