மகிந்தவின் நடிப்பை பார்த்தீர்களா..? முந்திரி பருப்பை உண்பதுபோல் நாட்டை சாப்பிட்டு விடுவார்
போர் நடைபெற்ற நேரத்திலும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை தமது அரசாங்கமே மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற போதிலும் ஆறு வருடங்களில் தனி நபர் வருமானத்தை தமது அரசாங்கம் மூன்று மடங்காக அதிகரித்து எனவும் அவர் கூறியுள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய உற்பத்தியும் மூன்று மடங்காக அதிகரித்தோம். இவ்வாறு எனது அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொண்ட நிலையில், சந்திரிக்கா அரசாங்கம் என்ன செய்தது என்று தற்போது கேட்கின்றனர்.
இவற்றுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமை எமது நடவடிக்கையல்ல. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முட்டாள்தனமான வேலை காரணமாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன் அது உலகில் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது மிகவும் கவலைக்குரிய விடயம். கடந்த அரசாங்கம் இலங்கை பொருளாதாரத்தை முற்றாக அழித்து வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றது. கோடிக்கணக்கில் நாட்டை கடனாளியாகியது.
இவ்வாறான நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தற்போதைய அரசாங்கம் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகிறது. இவ்வாறான நிலையில், சுனாமி அலை போல் அமெரிக்கா டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இதனால், பொருளாதாரத்தில் பிரச்சினை ஏற்படலாம். அதற்கான அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது. இதனை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருந்தாலும் சில மாதங்கள் கஷ்டப்பட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னால், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனக் கூறியிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சந்திரிக்கா,
தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்சவின் நடிப்பை பார்த்தீர்களா. பொருளாதாரத்தை மேம்படுத்த நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று ஊடகவியலாளர் கேட்கும் போது, பின்னால் திரும்பி பார்க்கிறார்.
அருகில் திரும்பி பார்க்கின்றார். அங்கு பார்க்கின்றனர். இங்கு பார்க்கின்றார். அவரிடம் பதில் இல்லை. மகிந்த ராஜபக்சவுக்கு பொருளாதாரம் தொடர்பான அறிவு கிடையாது.
அவர் எனது அமைச்சரவையில் இருந்த மனுஷன் தானே. இதன் பின்னர் பின்னால் அமர்ந்திருந்த முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் எதையோ கூறும் போது, மகிந்த ஆமாம் அப்படிதான் நாங்கள் தீர்வை கொண்டு வருவோம் என கூறினார்.
அவர் கூறியதை கூட மகிந்தவுக்கு சரியாக திருப்பிக் கூற முடியவில்லை. பொருளாதார பிரச்சினைக்கு மகிந்த ராஜபக்சவிடம் தீர்வுகள் இல்லை. கொள்ளையிட்டு அவர்தான் பொருளாதாரத்தை அழித்து விட்டு சென்றவர்.
அவருக்கு மீண்டும் ஆட்சியை கொடுத்தால், முந்திரி பருப்பை உண்பது போல் நாட்டை சாப்பிட்டு விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment