ஆடம்பர இறக்குமதிகளை நிறுத்துங்கள், அரசியல்வாதிகளின் சொகுசுக்கும் தடை
இறக்குமதி செய்யப்படும் ஆடம்பரப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்தி, தேசிய பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.
சந்தைக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பது தீர்வல்ல எனவும் டொலரை சேமிப்பதே முக்கியம் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களை வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் அடுத்த வருடம் அதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்கப் போவதில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஆடம்பரப் பொருட்களை சில நாட்களுக்கு இறக்குமதி செய்வதை நிறுத்துவது இந்த சந்தர்ப்பத்தில் சிறந்தது என கூறிய அமைச்சர், ஆடம்பர வைன் வகைகளைக் கொள்வனவு செய்வதை நிறுத்துமாறும் அனைத்து வீடுகளிலும் உணவுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்களை உள்நாட்டு உற்பத்திகளாக வரையறை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
பொருளாதார வீழ்ச்சி உலக முடிவல்ல. எமது நாட்டின் ஏற்றுமதிகளை அதிகரித்துக் கொண்டு நாட்டை ஏற்றுமதி நாடாக மாற்றுவதற்கு இது நல்ல சந்தர்ப்பம். தற்போது எமது ஏற்றுமதியாளர்கள் சிறந்த முறையில் செயற்படுகின்றனர். டொலரின் பெறுமதி அதிகரிக்க ஏற்றுமதியாளர்களுக்கான இலாபமும் அதிகரிக்கும். அதேபோல், வௌிநாட்டில் பணிபுரிவோருக்கும் தங்களுடைய வருமானத்தை குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்.
என மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை 81 டொலர் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்போதைய நிலை காரணமாக எரிபொருளின் விலை 100 டொலர் வரை அதிகரிக்கக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை இலங்கையர்களும் எதிர்கொள்ள வேண்டி வரும். எரிபொருள் விலைச்சூத்திரம் மீண்டும் தேவைப்படும். அதற்கும் தயாராக இருங்கள். என அவர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சர் இவ்வாறு கூறிய போதிலும், 244 மில்லியன் ரூபாவுக்கும் அதிகப் பெறுமதியான வாகனங்களை தமது அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுக்கு அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா இன்று பகிர்ந்தளித்தார்.
அமைச்சர்கள் மக்களுக்கு ஆலோசனை வழங்கிய போதிலும், வெளிநாட்டுப் பயணங்கள், சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்தல் ஆகியவற்றைக் குறைத்துள்ளனரா?
எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்தல், பாரியளவிலான அரச திட்டங்களை துரிதமாக மீளமைத்தல், சமூகப் பாதுகாப்பு வலையமைப்பிற்காக குடும்பங்களை உரிய முறையில் இனங்காணுதல் உள்ளிட்ட விடயங்களை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.
இலக்கை விடவும் அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்துள்ளதாக 5ஆவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் இறுதியில் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் வரிக்கொள்கையை மேலும் பயன்தரும் வகையில் செயற்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை பாராட்டுவதாகவும் மின்சாரம் தொடர்பில் சுயமாக விலையை தீர்மானிக்கும் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
As advised by Mangala, everyone should cancel their BMW Car import.
ReplyDelete