யாழ் - குளத்தடி பள்ளிவாசல் அருகேயுள்ள, குளங்களை கவனிப்பது யார்...?
-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் மாநகர சபை பிரிவிற்குட்பட்ட குளத்தடி பள்ளிவாசல் அருகே காணப்படும் பெரிய குளம், சிறிய குளம் என்பன தூர்வையற்று காணப்படுவதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
1990 ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இக்குளங்களை தமது அத்தியவசியத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த நிலையில் போர்ச்சூழல் காரணமாக இரு குளங்களும் உரிய பராமரிப்பின்றி அழிவடைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக பெரிய குளத்தினை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு முக்கியமாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளதுடன் இந்த குளங்களை மீளவும் துப்பரவு செய்து சீராக்கி தருமாறு தகுதி வாய்ந்த அதிகாரிகளை கேட்டுள்ளனர்.
இக்குளத்தின் அருகே ஜனாசா நல்லடக்கம் செய்யும் இடம் காணப்படுவதனாலும், நல்லடக்கத்தில் கலந்து கொள்பவர்கள் குளிப்பதற்கும் பெரிதும் உதவும் என குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தில் 1000 குளங்கள் அபிவிருத்தி என்ற திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இக்குளத்தினையும் துப்பரவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது விவசாய பிரதி அமைச்சராக உள்ள அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கும் இக்குளம் தொடர்பாக எடுத்து கூறப்பட்ட போதிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் குறிப்பிட்டனர்.
Post a Comment