இந்தியாவின் பொறியில், சிக்கியுள்ளாரா மஹிந்த..?
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை புது டெல்லியில் சந்தித்துள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்திய விஜயத்தின் போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.
முன்னாள் ஜனாதிபதி தனது மகன் நாமல் ராஜபக்ஸவுடன் இந்தியாவிற்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் பின்புலம் என்ன?
நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ செயற்பட்ட போது சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணியமை இரகசியமான விடயம் அல்ல.
கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம், அதிவேக வீதி உள்ளிட்ட பல பாரிய திட்டங்களை அவர் சீனாவுடன் இணைந்தே நடைமுறைப்படுத்தினார்.
எனினும், தற்போது மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றமை புலப்படுவதுடன், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஜூன் 25 ஆம் திகதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மஹிந்த ராஜபக்ஸவின் சீன உறவு தொடர்பில் வௌியிட்ட விடயம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக மஹிந்த ராஜபக்ஸவிற்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த சைனா ஹாபர் என்ற சீன நிறுவனம் வழங்கியதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாரியா அபி ஹபீப் என்ற ஊடகவியலாளர் இந்த தகவல்கள் அடங்கிய கட்டுரையை பத்திரிகையில் எழுதியிருந்தார்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் படி, அவர் இந்தியாவில் இருந்து செயற்படும் பத்திரிகையின் தெற்காசிய வலய செய்தியாளராக செயற்படுகிறார்.
மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் இந்தியாவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியாளர் செய்தி வௌியிட்டமை இந்தியாவின் தேவைக்கா?
இந்த வௌிக்கொணர்வு மூலம் மஹிந்த ராஜபக்ஸவிற்கு இந்தியாவுடன் மீண்டும் உறவைக் கட்டியெழுப்ப முடிந்ததா?
Post a Comment