நீதிமன்றத்தில் மூக்குடைப்பட்ட அனந்தி
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு ஆங்கில மொழி தெரியுமா? என்ற ஒரு சர்ச்சை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் மற்றைய இரு மாகாண அமைச்சர்களுக்கும் எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த சர்ச்சை கிளம்பியது.
குற்றப்பத்திரமும் ஏனைய ஆவணங்களும் ஆங்கில மொழியில் உள்ளன. எனது கட்சிக்காரரான அனந்தி சசிதரனுக்கு ஆங்கிலமொழி தெரியாது. ஆகவே, இந்தக் குற்றப் பத்திரத்தில் உள்ள விடயத்தை புரிந்துகொண்டு குற்றவாளியா, சுத்தவாளியா என்று பதிலளிக்க முடியாத நிலையில் அவர் உள்ளார் என்று அனந்தி சசிதரனின் தரப்பில் பிரசன்னமான சட்டத்தரணி கணேசராஜா தெரிவித்தார்.
அச்சமயம் குறுக்கிட்ட நீதியரசர்கள் இந்த வழக்கில் தம் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை நியமித்து நீதிமன்றுக்கு எதிர்மனுதாரர் அனந்தி சசிதரன் சமர்ப்பித்த ‘புரொக்ஸி’ பத்திரத்தை பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட்டனர்.
அதில் தமது சட்டத்தரணியாக இன்னார் நியமிக்கப்படுகின்றார் என்ற ஆவணத்தை அனந்தி சசிதரன் ஆங்கில மொழியில் நிரப்பியிருந்தமையை நீதிமன்று சுட்டிக்காட்டியது.
தனது சட்டத்தரணியைத் தாம் நியமிப்பது பற்றிய ஆவணத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கும் எதிர்மனுதாரர், தமக்கு ஆங்கில மொழி தெரியாதமையால் குற்றவாளியா, சுத்தவாளியா என்றுரைக்க முடியாமல் உள்ளது என்று கூறும் ஆட்சேபனையை ஏற்க முடியாது என நீதியரசர்கள் கட்டளை பிறப்பித்தனர்.
அச்சமயம் குறுக்கிட்ட மனுதாரர் டெனீஸ்வரனின் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, இவ்வாறு தமக்கு ஆங்கிலம் தெரியாது என தமது சட்டத்தரணி மூலம் அனந்தி சசிதரன் முன்வைத்த சமர்ப்பணத்தை அப்படியே நீதிமன்ற பதிவேட்டில் பதிய வேண்டும் என்று கோரினார்.
அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கின்றார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உண்டு.
அவற்றை எல்லாம் நீதிமன்றில் சமர்ப்பித்து, ஆங்கிலம் தெரிந்திருந்தும், தமக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறியதன் மூலம் இந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார் எனப் பிறிதொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாம் தொடுக்க எண்ணியுள்ளோம். அதற்காக இந்த விடயத்தை நீதிமன்றப் பதிவுகளில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகின்றோம் என்றும் அவர் வேண்டினார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதியரசர்கள் அந்த விடயங்களை நீதிமன்றப் பதிவுகளில் தவறாது சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டனர்.
Post a Comment