Header Ads



அப்பட்டமான பொய்கூறிய உதுமா, அதாஉல்லா அழிவுச் சத்தியத்திற்கு தயாரா..?

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 30 மில்லியன் ரூபா பணங்களை  ஒரு அரசியல் கட்சியிடம் பெற்றுக்கொண்டு புதிய அரசியல் கட்சி அமைக்கப் போவதாக,  தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் நான் தெரிவித்ததாக உதுமாலெப்பை தெரிவித்து வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தெரிவித்து வரும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு (27) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸ் கட்சியில் தான் வகித்த பதவிகளை இராஜினமா செய்துவிட்டு, தனது ஆதரவாளர்கள் மத்தியில் குறித்த இராஜினமா தொடர்பில் விளக்கமளிக்கும் போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதும் தனது பெயரைக் குறிப்பிட்டு அப்பட்டமான பொய்களைக்கூறி என்மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார் இதனை நான் முற்றாக மறுக்கின்றேன்.

உதுமாலெப்பை கூறுவது போன்று அவரது உண்மைக்குண்மையான விசுவாசமுள்ள தலைவர் அதாஉல்லா ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சுபையிர் மேற்கண்டவாறு என்னிடம் தெரிவித்தார் என கூறுவாராக இருந்தால் நான் அழிவுச் சத்தியம் செய்வதற்கும், உதுமாலெப்பையின் வீடு தேடிச்சென்று மன்னிப்பு கோரவும் தயாராகவுள்ளேன்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸ் கட்சியில் தான் வகித்த சகல பதவிகளையும், அண்மையில் இராஜினமா செய்திருந்தார். அதன் பின்னர் சில தினங்களாக அவர் தனது தொலைபேசியினையும் நிறுத்தி வைத்திருந்தார். இதனால் அவரது கட்சி மட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் உதுமாலெப்பை தேசிய காங்கிரசில் வகித்த பதவிகளை இராஜினமா செய்துள்ளதாகவும், அவர் கட்சி தாவப் போவதாகவும் சமூக வலயத்தளங்கள் ஏட்டிக்குப் போட்டியாக செய்திகளை வெளியிட்டன. உதுமாலெப்பை தனது பதவிகளை இராஜினமா செய்வதற்கும், தனக்கு விருப்பமான கட்சி ஒன்றில் இணைந்துகொள்வதற்கும் அவருக்கு உரிமையுள்ளது. அது அவரது தனிப்பட்ட விடயமாகும். 

கிழக்கு மாகாண சபையில் நீண்டகாலமாக உதுமாலெப்பையோடு ஒன்றாக செயற்பட்டவன் என்ற வகையிலும், அவர் எனது நெருங்கிய நண்பர் என்ற வகையிலும் பலர் என்னை தொடர்புகொண்டு அவரது இராஜினமா தொடர்பில் வினவினர். குறித்த இராஜினமா சம்மந்தமாகவும், அதன் உண்மைத்தன்மைகளை அறிந்திராதவன் என்ற வகையிலும் என்னால் யாருக்கும் பதில் வழங்க முடியாமல் போனது. 

இருந்தபோதிலும், என்னால் உதுமாலெப்பையை தொடர்புகொள்ள முடியாத போதிலும், குறித்த இராஜினமா தொடர்பில், சமூக வலயத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் உதுமாலெப்பைக்கு நெருக்கமானவர்களை தொடர்புகொண்டு விசாரித்தேன். அவரது இராஜினமா தொடர்பான உண்மையான விடயத்தினையும் அறிந்துகொண்டேன்.

இது இவ்வாறிருக்க, உதுமாலெப்பை 30 மில்லியன் பணங்களை பெற்றுக்கொண்டு வேறுறொரு கட்சி அமைக்கப் போவதாக தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவிடம் நான் தெரிவித்ததாக உதுமாலெப்பை ஊடகங்களில் தெரிவித்து வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். அவ்வாறு நான் ஒருபோதும் அதாஉல்லாவிடம் கூறவில்லை.

குறிப்பாக, நீண்டகால நண்பர் என என்னை விழிக்கும் உதுமாலெப்பை குறித்த சம்பவம் தொடர்பில் என்னை தொடர்புகொண்டு பேசாமலும் அதன் உண்மைத்தன்மையினை அறியாமலும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் எனது பெயர் குறிப்பிட்டு பேசியமை கவலையான விடயமாகும். சிரேஸ்ட அரசியல்வாதியும், அரசியல் முதிர்ச்சி மற்றும் நீண்டகால அரசியல் அனுபவங்களை கொண்ட உதுமாலெப்பை இந்தவிடயத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயற்பட்டுள்ளதுடன், அவரது அரசியல் முதிர்ச்சி, அனுபவம் என்பனகேள்விக்குறியாகியுள்ளது.

உதுமாலெப்பை தனது உரையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நான் தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவுடன் பேசவில்லை என்பதுடன், அதனை அவரது கட்சித்தலைவர் உண்மையாக கூறினார் என்பதனை உதுமாலெப்பை ஆதாரங்களுடன் நிருபிக்க வேண்டும். அல்லது அவர் என்மீது சுமத்திய போலிக்குற்றச்சாட்டை வாபஸ் பெறவேண்டும்.

அம்பாரை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உதுமாலெப்பை எந்தக்கட்சியில் இருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதனால் எனக்கு இலாபமும் கிடையாது. அவர் எங்கிருந்தாலும் எனது நீண்டகால நண்பர் என்பதே எனது நிலைப்பாடாகும் எனவும் சுபையிர் மேலும் தெரிவித்தார்.

(எஸ்.அஷ்ரப்கான்)

No comments

Powered by Blogger.