பரச்சேரியின் பெயரில், ஏமாற்றப்படும் யாழ்ப்பாண முஸ்லிம்கள்
(யாழ்ப்பாணத்திலிருந்து அபுபக்கர்)
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற விரும்பும் முஸ்லீம் மக்களிற்கு, தற்போது பரச்சேரி வயல் காணியில் வீடமைப்பதற்கு மீண்டும் நிபந்தனையுடனான அவகாசம் வழங்கப்பட்டமையானது அவர்களை மீண்டும் பல்வேறு சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
பரச்சேரி வயல் காணியில் மீள்குடியேற அல்லது வீடமைப்பதற்கு கடந்த 11.06.2018 அன்று யாழ் நீதிமன்றம் ஊடாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ள சில நிபந்தனையுடனான அனுமதியை நோக்கினால் குறித்த பிரதேசத்தில் நிம்மதியாக அம்மக்களை மீளக்குடியேற்ற அக்கறை செலுத்தப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் இங்குள்ள சில சட்டவிரோதமாக இயங்கும் பல்வேறு தரப்புகள் இப்பிரதேசத்தில் வீடுகளை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் எனவே இப் பிரதேசத்தில் காணியுடைய சகலரும் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை விரைவாக கையளிக்க வேண்டும் என தத்தமது எழுந்தமானமாக தத்தமது அரசியலுக்காக கூறுவது வழமையாகி விட்டது.
காணியின் அமைவிடம்
குறித்த வயற்காணி நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கமநல சேவை அதிகார பிரிவில் உள்ளடங்குவதுடன் அராலி யாழ்ப்பாணம் பிரதான வீதிக்கு அருகே அமைந்துள்ளது. 1990 ஆண்டிற்கு முன்னர் அக்கிராமத்தில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு அதனை சூழ 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் 1990 ஆண்டு புலிகளின் பலவந்தமாக வெளியேற்ப்பட்டுள்ளனர்.
இப்பிரதேசம் ஒரு பக்கம் வயற்காணிகளாக காணப்பட்ட போதிலும் நிலத்தில் ஏற்பட்ட உவர்த்தனமை காரணமாக வயல் செய்கைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் வீடுகள் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு அப்பகுதி வாழ் மக்கள் ஒன்றிணைந்த நிலையில் காணிகளை பரிசோதனை செய்து விவசாயத்திற்கு குறித்த காணி உகந்தது அல்ல என தத்தமது கட்டுமான நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.
இதற்காக அப்பகுதி முஸ்லீம்கள் அதில் மீள்குடியேற வேண்டும் என்பதற்காக உரிய நடைமுறை விதிமுறைக்கமைய புதிய கட்டடங்களை அப்பகுதியில் கட்டுவதற்காக தத்தமது பிரதேச செயலகத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர் .
ஆனால் அவ்விடயத்தை அறிந்த கமநல அபிவிருத்தி திணைக்களம் குறித்த மக்கள் வீடமைத்து குடியேற தடைவிதிக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.இதற்கு அப்பகுதி அரசியல் போட்டியும் முக்கிய காரணமாகும்.குறிப்பாக கூறினால் முஸ்லீம் அரசியல்வாதிகளிடையே ஒன்றுமை இன்மையே ஆகும்.
இருப்பினும் தற்போது 5 வருடங்களுக்கு பின்னர் விவசாய திணைக்களத்தினால் போடப்பட்ட இவ்வழக்கு தற்போது முடிவிற்கு வந்துள்ள போதிலும் சில நிபந்தனைகளுடன் அப்பகுதியில் வீடமைக்க அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
எனினும் இவ்வாறான முன் நிபந்தனைகள் யாவும் மீளக்குடியேறும் முஸ்லீம் மக்களுக்கு வெறுப்பேத்தி அவ்விடத்தில குடியேற விடாமல் தடுப்பதாகவே குற்றஞ்சாட்டப்படுகிறது.
இங்கு நடப்பது என்ன? மக்கள் பிரதிநிதிகள் அரசியல் வாதிகளின் ஏமாற்று கருத்துக்கள்
யாழ் பரச்சேரி கிராமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கடந்த 2015-03-23 அன்று சென்றிருந்தார்.
அங்கு மக்களிடம் கலந்துரையாடிய அவர் கிராம மக்கள் எதிர் நோக்கும் வாழ்வாதார காணி நிரந்தரவீடு போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவ்விடத்தில் தனது தொலைபேசி வாயிலாக அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
ஆனாலும் இது வரை அம்மக்களின் பிரச்சினைகள் தீர்வு காணப்படவில்லை.ஆனால் 5க்கும் அதிகமான மாவட்ட அபிவிருத்தி கூட்டங்கள் நடைபெற்ற போதிலும் குறித்த கிராமம் தொடர்பில் உரி அக்கறை இன்மையினால் இன்று வரை மிள்குடியேற்றம் இடம்பெறாமலே உள்ளது.அங்குள்ள பள்ளிவாசலும் இதுவரை புனரமைக்கப்படவில்லை
பரச்சேரி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மெளலவி பி.எஸ்.எம் சுபியான் நடவடிக்கை மேற்கொண்டதாக அவரால் ஊடகங்களிற்கு மக்கள் நன்றி தெரிவித்ததாக 2017-08-15 அன்று செய்தி ஒன்று வெளியிடப்பட்டது.
இதில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த பிரதேசத்தில் யாழ் முஸ்லீம் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமெனவும் அதற்குத்தடையாகவுள்ள அனைத்து விடயங்களும் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார் எனவும் இதனடிப்படையில் இக்கூட்டத்தில் இணைத் தலைவர்களாகக் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் ஒப்புதல் வழங்கியதுடன் பிரதேச செயலாளரை இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணித்தனர் என கூறியிருந்தார்.
8.12.2016 அன்று பரச்சேரிக்கு சென்ற முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இக்காணிகளில் மீண்டும் முஸ்லீம்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை சில தரப்புகள் தடுக்க முயல்வதாக தாம் அறிந்துள்ளதாகவும் எனவே இப்பின்தங்கிய குறித்த கிராம மக்களின் வாழ்வாதார காணி நிரந்திர வீடு போன்ற போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறிச்சென்றார்.இதுவரை எதுவும் நடந்தபாடில்லை.
பரச்சேரி முஸ்லிம்கள் குடியேறுவதைத் தடுக்காதீர்கள் என முன்னாள் அமைச்சர் அஸ்வர் 2016-10-13 அன்று ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். பரச்சேரி மீள்குடியேற்ற இழுபறி தொடர்பில் அரச அதிபர் நா.வேதநாதன் யாழ்ப்பாண முஸ்லீம்கள் பரச்சேரி கிராமத்தில் இனி எதுவித கட்டுமானங்களையும் மேற்கொள்ள கூடாது எனவும் இதனால் நீர்வளம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த கருத்தை மறுத்து மேற்கண்டவாறு கூறி இருந்தார்.
2018-7-21 பரச்சேரி வயல் காணியில் மீள குடியமர அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பல தரப்பினரின் நீண்டகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் கூறியதுடன் வெளிமாவட்டத்திலிருக்கும் இப் பிரதேசத்தில் காணியுடைய மக்கள் அவசரமாக விண்ணப்பங்களை கையளிக்குமாறு கேட்டுள்ளார்.எங்கு கையளிக்க வேண்டும்.எவரை நாடி குறித்த மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்கின்ற விளக்கத்தை இதுவரை மக்களுக்கு வழங்கவில்லை.இதனால் குறித்த மக்கள் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.
இது தவிர முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச டக்ளஸ் தேவானந்தா விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தற்போதைய விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தாங்கள் பங்குபற்றிய மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் பரச்சேரி முஸ்லீம் மக்களை மீள்குடியேற்றுவதாக நம்பிக்கை ஏற்படுத்தி ஏமாற்றியதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தமது பங்கிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் குறித்த முஸ்லீம் மக்களை மீள்குடியேற விடாது தடுத்து வந்துள்ளனர்.
அத்துடன் மேற்படிஅரசியல் வாதிகளுக்கு இவ்விடயத்தில் யால்ரா அடிப்பதற்காக காலத்திற்கு காலம் மேற்சொன்ன முஸ்லீம் அரசியல் வாதிகளின் பின்புலத்தில் சிறிய சிறிய அரச சார்பற்ற அமைப்புகளும் சங்கங்களும் அக்காலகட்டத்தில முளைத்திருந்ததுடன் மீள் குடியேற வந்த மக்களை ஏமாற்றி பணங்களை பெருமளவில் கறந்திருந்தன.
எனினும் அரசியல் வாதிகள் அவர்களது அல்லக்கைகள் குறித்த மக்களை தத்தமது அரசியலுக்காக ஏமாற்றிய போதிலும் பரச்சேரி வயல்காணியில் குறித்த மக்களை ஆரம்பத்தில் மீள்குடியேற்றுவதற்காக 04 குடும்பங்களுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனவந்தர்கள் இருவர் தமது சொந்த நிதியில் வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களில் ஜே.டி.ம் நியாஸ் ஹாஜியார் அடுத்தவர் டொபாஸ் நஸ்ரூன் .இவ்விருவரும் ஆரம்பித்த இச்செயற்பாடு தான் இன்று குறித்த மக்களின் மீள் குடியேற்ற விடயத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்று கூறலாம்.
இவர்களின் இம்முயற்சியை தடுப்பதற்காகவே தான் யாழ் மாவட்ட கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் உள்ளுர் முஸ்லீம் அரசியல் பிரமுகர்கள் என கூறிக்கொள்வோர் தனவந்தர்கள் கட்டி கொடத்த கட்டட உரிமையாளர்களாகிய குடும்பங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதனால் தனவந்தர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட பணிகள் யாவும் நீதிமன்றத்தின் இடைக்கால தடையினால் இடைநடுவில் பாதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தடை உத்தரவு வந்திருக்காது விட்டிருந்தால் எவ்வித அரசியல் வாதிகளது உதவிகளும் இன்றி இத்தனவந்தர்கள் முழு வீடுகளையும் அனைத்து மக்களிற்கு கட்டிக்கொடுத்திருப்பார்கள் என்கின்ற உண்மையையும் இங்கே கோடிட்டு எம்மால் காட்ட முடியும்.
தமது சொந்த வியாபாரங்களுக்கு அப்பால் எவ்வித அரசியல் வாதிகளும் யுத்தத்திற்கு பின்னர் யாழ் முஸ்லீம் மக்களுக்கு செய்ய முடியாததை இவர்களை போன்ற தனவந்தர்கள் இலைமறை காய்களாக மக்களுக்காக உதவியுள்ளனர் .
இது இவ்வாறு இருக்க தற்போது பரச்சேரி காணிகள் பல்வேறு தடைகளை தகர்த்து தற்போது வீடுகள் கட்டம் கட்டமாக நிர்மாணிப்பதற்கு அப்பகுதியில் மாவட்ட விவசாய திணைக்களத்தினால் அறிவுறுத்தல் நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது எதுவித சாதகமான முடிவுகளையும் எடுக்காத அரசியல் வியாபாரிகள் தற்போது மீண்டும் பரச்சேரி மீள்குடியேற்றம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீலக்கண்ணீர் வடிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த மீள்குடியேற்றத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தடையாக உள்ளனர் என்ற விடயம் இப்போது இவ்வாறு தான் திரிவு படுத்தி சொல்லப்படுகிறது.இதற்கு காரணம் யாழ்ப்பாணம் பரச்சேரி தமிழர் வயல் நிலம் எனவும் இது முஸ்லீம் வீட்டு திட்டத்திற்க்கு வழங்க கூடாது என்பதற்காக பரச்சேரி காணி தற்போது இருக்கட்டும்.அங்கு வாழ்ந்த மக்களை வேறொரு இடத்திற்கு மீள்குடியேற்றலாம் என்கின்ற பாணியில் முஸ்லீம் மக்களை மீண்டும் வெறுப்படைய வைத்தலாகும். மக்கள் மத்தியில் குழப்ப நிலைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார்.
இருந்த போதிலும் நீதிமன்ற தீர்ப்பின் பயனாக தற்பொழுது கட்டிய வீடுகளை இடைநடுவில் கைவிட்டவர்கள் அவற்றை பூர்த்தி செய்து குறியேற கமநல சேவைகள் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஏனையோருக்கும் மீள் குடியேற சில நிபந்தனைகளுடன் மீள்குடியேறலாம் என்ற சமிஞ்சை விட்டுள்ளது.
எனவே எவ்வித அரசியல் உள்நோக்கங்களையும் கருத்தில் கொள்ளாது அப்பாவி அக்கிராம மக்களை உரிய முறையில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவர்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் குறித்த பிரதேசத்தில் காணிகளைக் கொண்டிருக்கின்ற வெளிமாவட்டங்களில் தற்போது வசித்து வரும் புத்தளம் கொழும்பு நீர்கொழும்பு பாணந்துறை குருநாகல் அம்பாறை பகுதியில் உள்ள மக்களை அவசரமாக யாழ்ப்பாணம் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு நேரடியாக சென்று தமது காணிகளுக்குரிய அனுமதிகளை பெற சுயாதீனமாக இயங்கும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஜம்மியதுல் உலமா கிளை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் மிண்டும் குடியேறி வாழும் பிரதேமாக பரச்சேரி பிரதேசத்தை மாற்றுவது அனைவரதும் கடமையாகும்.
இதில் சுமார் 75 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள குடியமர தற்போது விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
Post a Comment